விசேடமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி நெறிக்காக சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் இந்தியா வருகை
அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு சிறிலங்காக் காவல்துறையினருக்கு முழு நிதியுதவியுடன் பயிற்சி இடங்களை இந்தியா வழக்கமாக வழங்குகிறது.
சிறிலங்காவின் மூத்த காவல்துறை அதிகாரிகள் 23 பேர் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இரண்டு வார காலச் சிறப்புப் பயிற்சி பாடநெறியில் தற்போது புதுதில்லியில் தங்கியுள்ளதாகக் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
"சிறிலங்காக் காவல்துறையின் வேண்டுகோளின் பேரில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் சிறிலங்காக் காவல்துறையின் பணியாளர்களுக்கு ஏற்பத் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்து வருகிறது. ஜெய்ப்பூரில் உள்ள மத்திய துப்பறியும் பயிற்சி நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள மத்திய துப்பறியும் பயிற்சி நிறுவனம், கொல்கத்தாவில் உள்ள மத்திய துப்பறியும் பயிற்சி நிறுவனம் மற்றும் இந்தியாவின் மானேசரில் உள்ள தேசிய பாதுகாப்புப் படை ஆகியவை இவை” என்று அதன் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு சிறிலங்காக் காவல்துறையினருக்கு முழு நிதியுதவியுடன் பயிற்சி இடங்களை இந்தியா வழக்கமாக வழங்குகிறது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இளைய, இடைநிலை மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட 60 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குற்றச் சம்பவ இட மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையக் குற்ற விசாரணை மற்றும் மிகவும் முக்கியமானவர்கள் (விஐபி) பாதுகாப்புப் பயிற்சி போன்ற பல்வேறு பாடங்களில் உயர்தரப் பயிற்சி வகுப்புகளால் பயனடைந்துள்ளனர்.” என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாடநெறிகள் இந்திய அரசாங்கத்தினால் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) மற்றும் " சிறிலங்காவுக்கு உதவுதல்" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு 130 க்கும் மேற்பட்ட சிறிலங்காக் காவல்துறை அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





