சலே சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் - உதய கம்பன்பில
அரசாங்கத்தின் மானத்தைக் காப்பாற்ற அவரைத் தற்கொலைக்குத் தூண்டும் ஒரு சதியே இங்கு அரங்கேறுகிறது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அரசியல் பழிவாங்கல்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அநாகரிகமான சித்திரவதைகளுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்பன்பில தெரிவித்தார்.
கொழும்பில் 06-06-2026அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சுரேஷ் சலேவின் மனைவி மற்றும் மகனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விபரங்களை வெளியிடுவதாக இதன் போது அவர் குறிப்பிட்டார்.
அவர், மேலும் தெரிவிக்கையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்ட அரசியல் உத்தரவின் பேரிலேயே சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை இரவு அவருக்கு ஒரு கரண்டி சோறும் முள்ளங்கிக் குழம்பும் மட்டுமே உணவாக வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு தட்டில் வழங்கப்படாமல், தரையில் பத்திரிகை ஒன்றை விரித்து அதன் மீதே ஊற்றப்பட்டுள்ளது. குழம்பினால் நாளிதழ் ஊறிப்போய், உணவைக் கையில் எடுக்க முயன்ற போது அது கிழிந்து உணவு தரையில் விழுந்துள்ளது.
இதனால் மன ரீதியாகப் பாதிக்கப்பட்ட அவர், 'பொலிஸார் என்னை ஒரு நாயை விடக் கேவலமாக நடத்துகிறார்கள்; நான் அப்படி என்ன தவறு செய்தேன்?' எனக் கண்ணீர் மல்கக் கூறி, வெள்ளிக்கிழமை இரவு முதல் உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை உட்கொள்ள மறுத்து மரண உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். 'இவ்வாறான இழிவுகளைச் சகித்துக் கொண்டு வாழ்வதை விட மரணமடைவதே மேல்' என்று அவர் தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குத் தடயவியல் மருத்துவர் ஜெயசீலன் ஜெயகாந்தன் சமர்ப்பித்துள்ள மருத்துவ அறிக்கையின்படி, சுரேஷ் சலேவுக்கு கடுமையான புரதக் குறைபாடு, விட்டமின் டீ மற்றும் பீ12 குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. போதிய உணவோ, தண்ணீரோ வழங்கப்படவில்லை.
கைது செய்யப்பட்டு ஏழு நாட்களின் பின்னர், அவரது ஆடைகள் அனைத்தும் களையப்பட்டு, கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில், மேலும் மூன்று கைதிகளின் முன்னிலையில் அதிகாரி ஒருவரால் அவர் அநாகரிகமான முறையில் மலக்குடல் உடற்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன் வெறும் நான்கு அடி அகலமுடைய சிறிய அறையில், 40 நாட்களாக வெறும் தரையில் அவர் தூங்க வைக்கப்பட்டுள்ளார். அவரது தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் முகத்திற்கு நேரே 24 மணி நேரமும் பிரகாசமான மின் விளக்கு ஒளிரவிடப்பட்டுள்ளதுடன், கால்களிலும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவர் சிறுநீர் கழிப்பதற்கான ஏற்பாடுகள் அந்த அறைக்குள்ளேயே மிக மோசமாக செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
சுரேஷ் சலே தற்கொலை செய்து கொள்வதற்கான அதிக ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் ஏப்ரல் மாதமே எச்சரித்தும், அவரை மனநல சிகிச்சைக்கான இடத்திற்கு மாற்றாமல் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் சித்திரவதை செய்து வருகின்றனர். 'உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது இராணுவ வீரர்களே' என்ற பொய்யைக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இரண்டு வருடங்களாகியும் தங்களது பொய்க்கு ஒரு சாட்சியைக் கூடக் கண்டறிய முடியாமல் சுவற்றில் முட்டிய பூனையின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே, சுரேஷ் சலே தற்கொலை செய்து கொண்டால், அனைத்து இரகசியங்களும் அவருடன் மறைந்துவிட்டன எனக் கூறி இந்தப் பொய்யை மூடிமறைத்துத் தங்களது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்தின் மானத்தைக் காப்பாற்ற அவரைத் தற்கொலைக்குத் தூண்டும் ஒரு சதியே இங்கு அரங்கேறுகிறது.
நீங்கள் மரணித்தால் அதன் இலாபம் அரசாங்கத்திற்கே தவிர உங்களுக்கு அல்ல என்பதை சுரேஷ் சலேவிடம் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். நீங்கள் உயிரோடு இருந்தால் மட்டுமே நீங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க முடியும். எனவே, தமிழீல விடுதலைப்புலி பயங்கரவாத சக்திகளைத் திருப்திப்படுத்த உங்களைப் பழிவாங்கும் இந்த அரசாங்கத்துக்கும், குற்றப்புலனாய்வு பிரிவிலுள்ள உள்ள ஒருசில மிருகத்தனமான அதிகாரிகளுக்கும் நீங்கள் கொடுக்கும் ஒரே அடி நீங்கள் உயிரோடு இருப்பது மட்டுமே. தயவுசெய்து உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்.
2009 மே 18 இற்குப் பின்னர் நாம் வாழும் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் இராணுவத்தினர் எமக்கு இரவலாகத் தந்த ஆயுள் காலம் தான். நமது உயிரைக் காப்பாற்றிய சுரேஷ் சலே போன்ற ஒரு உன்னத இரணுவ அதிகாரிக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் சமூக ஊடகங்கள் வாயிலாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.





