படுகொலை செய்யப்பட்ட லந்தவுக்கு அநுர அரசாங்கத்தில் நீதி கிடைக்க வேண்டும்: அஜித் பி பெரேரா எம்.பி.
படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவுக்கு இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின் இனி எந்த அரசாங்கத்திலும் நீதி கிடைக்காது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவுக்கு இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின் இனி எந்த அரசாங்கத்திலும் நீதி கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 08-01-2026 அன்று நடைபெற்ற மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் கீழான ஒழுங்குவிதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.ஆனால் அரச நிர்வாகத்தில் ஊழல் மோசடி மிதமிஞ்சியுள்ளது. மின் விநியோக கொள்வனவு விலைமனுகோரலிலும் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதியமைச்சர் தலைமையில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குழு இன்றுவரை கூடவில்லை. நீதியமைச்சர் விருப்பத்துக்கு அமைவாகவே இவ்விடயத்தில் செயற்படுகிறார்.இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவுறுத்தியும் அவர் அதனை கவனத்திற் கொள்ளவில்லை.
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக நாங்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் சபாநாயகர் பாராளுமன்ற கோட்பாடுகளுக்கு முரணாக செயற்பட்டார். அதேபோல் இந்த கொள்கலன்கள் விவகாரத்தில் சபாநாயகர் முறையாக செயற்பட வேண்டும்.இல்லையேல் பாரிய நெருக்கடிகள் ஏற்படும்.
சிரேஷ்ட ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (நேற்று) 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. உண்மை வெளிவரவில்லை. லசந்தவுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என்று குறிப்பிட்டுக்கொண்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவுக்கு இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின் இனி எந்த அரசாங்கத்திலும் நீதி கிடைக்காது.
உண்மையை நிலைநாட்டுவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வித தடைகளும் இல்லை. ஜனாதிபதி இந்த விடயத்தில் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தலாம். உண்மையை வெளிக்கொண்டு வர அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.





