இலங்கை - இந்தியா வரலாற்று நாகரிகத்தின் இரட்டையர்கள்: இந்திய உயர்ஸ்தானிகர்
2024 டிசம்பரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தையும், 2025 ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இலங்கைக்குத் தேவையான நேரங்களில் இந்தியா வழங்கிய உதவிகள், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இரு நாடுகளும் இயற்கையான நண்பர்கள் மாத்திரமின்றி வரலாற்று நாகரிகத்தின் இரட்டையர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை – இந்திய சங்கத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த இரவு விருந்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்துகொண்டார். இந்த இரவு விருந்தில் இந்திய மற்றும் இலங்கை வர்த்தகச் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட இலங்கை – இந்திய சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியாவின் 'அயல் நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கையையும் 'மாகாசாகர்' திட்டத்தையும் எடுத்துக்காட்டினார். அத்துடன், இலங்கைக்குத் தேவையான நேரங்களில் இந்தியா வழங்கிய உதவிகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
2024 டிசம்பரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தையும், 2025 ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த விஜயங்கள், ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், புதிய திட்டங்கள், மற்றும் இணைப்பு, வலுசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் உருமாற்றம், திறன் மேம்பாடு, மற்றும் பிராந்திய நிலைத்தன்மை போன்ற முக்கிய துறைகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தன என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். இந்தியாவும் இலங்கையும் இயற்கையான நண்பர்கள் என்றும் மற்றும் வரலாற்று நாகரிகத்தின் இரட்டையர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கிய பொருளாதார நாடான இந்தியா 2038 ஆம் ஆண்டளவில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்றுமதிக்கான ஒரு சந்தை, விநியோகச் சங்கிலி கூட்டாளர் மற்றும் முதலீட்டின் ஆதாரமாக, இலங்கையும் இந்த வளர்ச்சியிலிருந்து பயனடையலாம் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
அத்துடன், வீடமைப்பு, சுகாதாரம், புகையிரதங்கள், கல்வி, டிஜிட்டல் மயமாக்கல், மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி போன்ற துறைகளில் உள்ள திட்டங்களை உள்ளடக்கிய, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய, 800 மில்லியன் டொலருக்கும் அதிகமான மானியங்கள் உட்பட இலங்கையில் இந்தியாவின் ஏறக்குறைய 7 பில்லியன் டொலர் மேம்பாட்டுத் திட்டங்களை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றுகையில், இந்தியாவின் துரித பொருளாதார வளர்ச்சி குறித்து இலங்கை பெருமை கொள்வதாகவும், அதன் வளர்ச்சியை இலங்கை எதிர்பார்க்கிறது என்றும் குறிப்பிட்டார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்து வரும் ஒரு நாட்டிற்கு அருகில் இருப்பதற்கான வாய்ப்புகளை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது. அத்துடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் பாடுபடுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மருந்து மற்றும் மருத்துவ உபகரண உற்பத்தி போன்ற துறைகள் உட்பட இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அத்துடன், இலங்கை - இந்திய சங்கம் நிறுவப்பட்டது முதல் இரு நாடுகளுக்கும் இடையே சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதிலும் மேம்படுத்துவதிலும் இலங்கை – இந்திய சங்கம் ஆற்றிவரும் பங்கையும் அவர் பாராட்டியுள்ளார்.





