வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி மக்களுக்கு நீதியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் - அமைச்சர் நளிந்த
2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற அரசியலமைப்புத் உப குழுவின் பரிந்துரைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நீதிமன்றங்களில் நீண்டகாலமாகத் தேங்கிக் கிடக்கும் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி மக்களுக்கு உடனுக்குடன் நீதியை வழங்குவதற்காகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
31-07-2026 அன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த இரண்டு தேர்தல்களில் மக்களுக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அமையவே அரசாங்கம் இந்நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் கீழ் மேல் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், மாவட்ட அளவில் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகளை அமைத்தல் மற்றும் புதிய நீதிபதிகளைப் பணியமர்த்துதல் போன்ற திட்டங்கள் உள்ளன.
இத்தகைய மாற்றங்களைச் செய்யும்போது அனுபவமும் முதிர்ச்சியும் மிக்க நீதிபதிகளின் சேவை தொடர்ந்தும் தேவைப்படுவதால், நீதவான்கள் முதல் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் வரையிலானவர்களின் ஓய்வுபெறும் வயதை ஒரு வருடத்தால் உயர்த்துவதற்கு அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைவராக இருந்த காலத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த அறிக்கை மற்றும் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற அரசியலமைப்புத் உப குழுவின் பரிந்துரைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 83 ஆம் பிரிவின்படி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமா அல்லது பொது வாக்கெடுப்பு தேவையா என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும். எதிர்க்கட்சியினரின் சில கருத்துக்கள் அவர்களின் அறியாமையையோ அல்லது மக்களை ஏமாற்றும் தந்திரத்தையோ காட்டுகிறது. இந்நடவடிக்கையில் அரசாங்கமும் மக்களும் ஒரே நிலையிலேயே உள்ளனர் என்றார்.





