ஹரக் கட்டாவுக்கு எதிராக மேன்முறையீடு செய்ததாக சட்டமா அதிபர் மன்றில் அறிவிப்பு
தனது கமரா கோணத்தை நகர்த்தி, தன்னைச் சுற்றி நின்று கொண்டிருந்த கடற்படை வீரர்களை நீதிமன்றத்திற்குச் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பிரபல போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பான சந்தேகநபரான நடுன் சிந்தக விக்ரமரத்ன அல்லது 'ஹரக் கட்டா' மற்றும் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என்று மேல்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராஹல முன்னிலையில் 20-08-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இது தொடர்பான தகவல்களைப் அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு முன்வைத்தார்.
மேல்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதி முடிவின் அடிப்படையிலேயே இவ்வழக்கின் மேலதிக சட்ட நடவடிக்கைகள் அமைய வேண்டும் எனவும் முறைப்பாட்டுத் தரப்பு சுட்டிக்காட்டியது.
மேலும், பிரதிவாதிகள் சார்பில் தாக்கல் செய்யப்படும் எந்தவொரு மனுவையும் இனி மேன்முறையீட்டு நீதிமன்றத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரச சட்டத்தரணி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து வாதிட்ட பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், ஜூலை 30 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில் மேல்நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் குற்றப்பத்திரிகை எதுவுமில்லை எனக் குறிப்பிட்டனர்.
இத்தகைய சூழ்நிலையில், பிரதிவாதிகளைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பதற்கு எவ்வித சட்டப் பின்னணியும் இல்லை என்றும் ஹரக் கட்டா மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட மிதிகம ருவன் ஆகிய இருவரும் தற்போது வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குப் பதிலாக கடற்படையினரின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
இவ்வழக்கு விசாரணையின் போது, 'ஹரக் கட்டா' நிகழ்நிலையில் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது நேரடியாக நீதிமன்ற உரையாடலில் பங்கெடுத்த அவர், தான் வெலிசர சிறைச்சாலையில் கடற்படை அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தனது கமரா கோணத்தை நகர்த்தி, தன்னைச் சுற்றி நின்று கொண்டிருந்த கடற்படை வீரர்களை நீதிமன்றத்திற்குச் சுட்டிக்காட்டினார். தங்காலையில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது தனது முழங்கால் உபாதைக்காக தாங்காலை ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால் வெலிசர சிறைச்சாலையில் தனக்குத் தேவையான உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாகவே சிறைச்சாலை வசதிகளுக்கு இராணுவ மற்றும் கடற்படைப் பணியாளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இருதரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த மேல்நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராஹல, மேல்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் ஏற்கனவே மேன்முறையீடு செய்துள்ள நிலையில், குறித்த பிரதிவாதிகளுக்குப் பிணை வழங்குவதோ அல்லது அவர்களை விடுவிப்பதோ பொருத்தமானதாக இருக்காதென சுட்டிக்காட்டினார்.
எனவே, நிவாரணம் எதனையும் பெற விரும்பினால் அதனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்குமாறு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், பிரதிவாதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பிலேயே இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அதேவேளை, சந்தேகநபருக்குத் தேவையான பொருத்தமான மருத்துவ சிகிச்சைகளை உறுதி செய்யுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, இவ்வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.





