பொது முகாமையாளரை உடன் பதவி நீக்க வேண்டும்: ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்கம்
தற்போதைய புகையிரத திணைக்கள பொது முகாமையாளரை பதவி நீக்கம் செய்வதே தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கையாகும் என்பதை வலியுறுத்தினர்.
புகையிரத திணைக்களத்தில் நிலவும் நிர்வாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் திணைக்களத்தின் பொது முகாமையாளரை உடன் பதவி நீக்க வேண்டும் என ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்கத்தினர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் வலியுறுத்தினர்.
தொழிற்சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கை குறித்து தீர்மானம் எடுப்பதற்கு போதுமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் போதுமான காலவகாசம் கோரிய நிலையில், அதற்கு தொழிற்சங்கத்தினர் இணக்கம் தெரிவிக்காத நிலையில் ஏற்கெனவே திட்டமிட்டதற்கமைய நாளை மறுதினம் (புதன்கிழமை) 48 மணிநேர அடையாள தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவது உறுதி என்று கூட்டாக அறிவித்தனர்.
புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தொடர்பில் தீர்மானம் கிடைக்கப்பெறாததால் 17, 18 ஆகிய இரு தினங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தும் தீர்மானத்தில் மாற்றமில்லை
புகையிரத தொழிற்சங்கத்தினர் நாளை மறுதினம் முதல் முன்னெடுக்கவுள்ள 48 மணிநேர தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று திங்கட்கிழமை போக்குவரத்து அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது புகையிரத திணைக்களத்திற்குள் காணப்படும் நிர்வாக மற்றும் செயல்பாட்டுப் பிரச்சினைகள், ஊழியர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சேவைப் பாதிப்புகள் குறித்து ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்கப் பிரதிநிதிகள் விரிவாகக் கருத்துக்களை முன்வைத்தனர்.
குறிப்பாக, தற்போதைய புகையிரத திணைக்கள பொது முகாமையாளரின் நிர்வாகம் குறித்து தொழிற்சங்கங்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளமைக்கான காரணங்களை தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சின் செயலாளரிடம் எடுத்துரைத்தனர்.தற்போதைய புகையிரத திணைக்கள பொது முகாமையாளரை பதவி நீக்கம் செய்வதே தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கையாகும் என்பதை வலியுறுத்தினர்.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையின் நோக்கம் அரசாங்கத்திற்கு அல்லது நாட்டிற்கு எதிராகச் செயல்படுவது அல்ல என்றும், புகையிரத திணைக்களத்தை மீண்டும் கட்டியெழுப்புவது, திறமையான மற்றும் நம்பகமான புகையிரத சேவையை ஏற்படுத்துவது மற்றும் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதுமே ஆகும் என்று குறிப்பிட்டனர்.
தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முன்வைத்த கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்திய போக்குவரத்து அமைச்சின் செயலாளர், புகையிரத திணைக்களத்தைக் கட்டியெழுப்புவதே தொழிற்சங்கங்களின் உண்மையான நோக்கம் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.





