வேலையில்லா பட்டதாரிகளை ஏமாற்றியுள்ள அரசாங்கம்: எதிர்க்கட்சி தலைவர்
தேர்தலுக்கு முன்னர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தான் ஆட்சிக்கு வந்ததும் நாட்டில் 35,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்தார்.
அரசாங்கம் இரு வரவு செலவுத் திட்டங்களில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தொழில்களைப் பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை மீறி, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான பொதுத் தேர்தலின் போதும், தொழில்களைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதிகள் வழங்ககப்பட்டன. அரசாங்கம் பட்டதாரிகளின் வேலையில்லா நிலைமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மாவட்ட மட்டத்தில் அமைப்புகளை நிறுவி, அந்த அமைப்புகளின் தலைவர்களுக்கு மாத்திரம் நியமனங்களைப் பெற்றுக் கொடுத்து, ஏனைய பட்டதாரிகளை கைவிட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தான் ஆட்சிக்கு வந்ததும் நாட்டில் 35,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்தார். இந்த வாக்குறுதி வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் கொள்கை அறிக்கையின் 72 ஆவது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் எந்தெந்த துறைகளில் அரச சேவையில் உள்வாங்கப்படுவர் என வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதியும் அரசாங்கமும் இரு வரவு செலவுத் திட்டங்களிலும் மீறியுள்ளனர். அவற்றை முற்றாக மறந்து செயற்பட்டு வருகின்றனர். பொய் கூறி பட்டதாரிகளை ஏமாற்றியது ஏன் ? வேலையில்லாப் பட்டதாரிகளை அலைக்கழித்தது ஏன்? வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
எதிர்க்கட்சி இதற்கான முழு ஆதரவையும் வழங்கும். மேலதிக ஒதுக்கீட்டு மதிப்பீடுகளுக்கான ஆதரவையும் வழங்குவோம். இவர்களுக்கு இப்போதாவது தொழில்களைப் பெற்றுக் கொடுங்கள்.
பொய்களால் நாட்டை ஆள்வதைக் கைவிடுங்கள். மூன்று தேர்தல்களில் வழங்கிய இந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். பட்டதாரிகளின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுங்கள். பட்டதாரிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் இருப்பது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றார்.





