தமிழர்களை ஏமாற்ற முயன்றால் நாடு வேறுதிசைக்கு செல்லும்: சிறிதரன்
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி ஒரு சுவாரஷ்ய விடயத்தை குறிப்பிட்டா ஆனால் தேர்தலை எப்படி, எந்த முறையில் நடத்தலாம் என்பதனை பிறகு பேசலாம் என்றவாறாக கூறினார்.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாணசபைகளை கூட நடைமுறைப்படுத்த அரசாங்கம் மறுப்பது மிகவும் ஆபத்தான விடயம். இனிமேல் தமிழர்கள் அரசியல் தீர்வு கேட்கமாட்டார்கள் என்று நினைத்தால் நீங்கள் செய்யும் மிகப்பெரிய வரலாற்றுத் தவறாகவே அமையும். இனியும் எம்மை ஏமாற்ற முற்பட்டால் இலங்கை வேறொரு திசைக்கு செல்லும் என்பதனை எச்சரிக்கையாக கூறுகின்றேன்.சர்வதேச சமூகம் தமிழர்களுக்கான தீர்வை வழங்கத் தயாராக வேண்டும். தமிழர்களுக்கான தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் அதுவொரு சர்வதேச தலையீட்டுடன் மட்டும் தான் சாத்தியமாகுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 07-11-2025அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வரவு - செலவுத் திட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளைக் காண்பதற்கோ அல்லது வடக்கு மற்றும் கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்ப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதற்கோ ஜனாதிபதியிடம் எந்தவிதமான கருத்துக்களும் இல்லை.
தற்போதைய ஆட்சியாளர்களிடம் அதுபற்றிய தூரப்பார்வை இல்லை என்ற விடயங்களை இந்த வரவு செலவுத்திட்டம் தெளிவாக சொல்கின்றது .வரவு செலவுத்திட்டத்தில் 10 இல் ஒன்றரைப்பங்கு யுத்தம் இல்லாத நாட்டிலுள்ள பாதுகாப்பு தரப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .அரைப்பங்குதான் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் உங்களின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி ஒரு சுவாரஷ்ய விடயத்தை குறிப்பிட்டா ஆனால் தேர்தலை எப்படி, எந்த முறையில் நடத்தலாம் என்பதனை பிறகு பேசலாம் என்றவாறாக கூறினார். இந்த பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களாக 159 ஆசனங்கள் ஆளும் தரப்பில் உள்ளது.
ஒரு சட்டமூலத்தில் திருத்தம் கொண்டு வந்து மாகாணசபை ஆட்சி முறையை நடத்துவதற்கு ஏன் நீங்கள் தயங்குகின்றீர்கள்? தயக்கத்திற்கான காரணம் என்ன? நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்று இங்கு யுத்தம் நடக்கவில்லை, இனவழிப்பு நடக்கவில்லை, போர்க்குற்றங்கள் நடக்கவில்லையென கூறுகின்றீர்கள். சர்வதேச விசாரணை வேண்டாமென மண்டியிடுகின்றீர்கள்.இவ்வாறான குற்றங்கள் நடக்கவில்லையென்றால் ஏன் நீங்கள் விசாரணைகளுக்கு தயங்க வேண்டும்?
நேர்மையும் நெஞ்சுரமும் உங்களிடம் இருந்தால், நீங்கள் ஒரு தைரியமான இனமாக இருந்தால், நீங்கள் குற்றம் செய்யவில்லையென்றால் விசாரணைகளை ஏன் நீங்கள் தடுக்க வேண்டும்? ஒருபுறம் இவ்வாறான விசாரணைகளை தடுத்துக் கொண்டு மறுபுறம் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடக்கும், ஆனால் நடக்காது என்கின்றீர்கள்.
இதுதான் ஜனாதிபதியின் வரவு, செலவுத்திட்ட அறிவிப்பு.காரணம் இந்த நாட்டில் தமிழர்களை நீங்கள் தோல்வியடைந்த ஒரு இனமாக கையளப்பார்க்கின்றீர்கள்.நாங்கள் சொல்வதனை நீங்கள் கேட்க வேண்டும் என்ற உங்களின் மனநிலையை எம்மால் உணரமுடிகின்றது. இது நல்லதல்ல
உங்களுக்கு இன்று பெரும்பான்மை இருக்கலாம். ஆனால் உங்களைவிட பெரும்பான்மையுடன் வந்தவர் கோட்டாபய ராஜபக்ஷ. அவர் வந்த வரத்தென்ன . போன போக்கென்ன.ஆகவே ஆட்சியென்பது நிலையானதல்ல. நீதியும் தர்மமும் அறமும் நிலைக்காத வரைக்கும் இந்த நாடு ஒரு அழிவுப் பாதைக்கே போகும்.எதிர்வரும் ஆண்டு இந்தமாதம் இந்த திகதியில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடக்கும் என சொல்ல முடியாதவராகவே ஜனாதிபதி இருக்கின்றார். எங்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. நாங்கள் செய்வோம் என்று சொல்கின்ற தைரியம் உங்களிடம் காணப்படவில்லை.
யாம் மாவட்டத்தில் 13000 பேருக்கு குடியிருக்க காணியில்லை . கிளிநொச்சி மாவட்டத்தில் 4000பேருக்கு குடியிருக்க காணியில்லை.முல்லைத்தீவு , வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை என குடியிருக்க காணியில்லாது தமிழ் மக்கள் உள்ளனர். மக்கள் குடியிருக்ககூடிய காணிகளில் உங்களின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாம்பழத்தோட்டம் செய்வது பற்றிக் கதைக்கின்றார். உற்பத்தியை அதிகரிக்கப் போகின்றாராம்.
வெளிநாட்டு முதலீடுகளை வரவைக்கப் போகின்றாராம்.வரவு செலவுத்திட்டத்தில் பல அபிவிருத்திகளைப்பற்றி ஜனாதிபதி அறிவிக்கின்றார். ஆசியாவிலேயே வெள்ளை உப்பு உற்பத்திக்கு புகழ்பெற்ற இடம் குறிஞ்சாத் தீவு .அதற்கு ஒரு 1000 மில்லியன் ரூபாவை ஜனாதிபதியால் ஒதுக்க முடியவில்லை. ஆனையிறவு உப்பளத்தை அபிவிருத்தி செய்யவேண்டியதேவையிருந்தும் எதுவும் ஒதுக்கப்படவில்லை.வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைகள் தொடர்பில் ஏன் கவனத்தில் எடுக்கவில்லை?
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுங்கள் எனக் கேட்டோம்.அதற்கான நிதியை உதவியாக வழங்க இந்தியா முன்வந்தது. ஆனால் உங்களுக்கு அதில் விருப்பமில்லை. ஏனெனில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்தால் பல கப்பல்கள் அங்கு வரும். யாழ்ப்பாணம் ஒரு முக்கிய வர்த்தக இடத்தை பிடித்துவிடும் என்பதால் நீங்கள் அதனை அபிவிருத்தி செய்ய விரும்பவில்லை. பலாலி, திருகோணமலை. சிகிரியா விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கியதாக ஜனாதிபதி கூறினார். பலாலி ஒரு சர்வதேச விமான நிலையம் ஆனால் அதனூடாக 15 கிலோவுக்கு மேல் பொருட்கள் கொண்டுவரமுடியாது.
நீங்கள் போலியாக பேசுகின்ற அல்லது முகத்துக்கு பேசுகின்ற அபிவிருத்தி அபிவிருத்தியல்ல.வயோதிபர்களுக்கு மாலை போடுவதும் அம்மாக்களை கட்டிக் கொஞ்சுவதும் அபிவிருத்தியல்ல. ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு எந்த தடையும் இல்லாமல் தனது சொந்த உழைப்பில் வாழ்கின்றார்களா என்பதைப்பார்த்து அந்த நிலையை உருவாக்குங்கள்.
நீங்கள் ஒரு சோஷலிசவாதிகள். அப்படியானால் ஒடுக்குமுறைக் கெதிரானவர்கள். ஆனால் நீங்கள் கூட தமிழ் மக்களை ஒடுக்கப்பார்க்கின்றீர்கள். அவர்களுக்கான உரிமைகளை வழங்க மறுக்கின்றீர்கள் . அப்படியானால் உங்களின் சோஷலிசம் எந்த வகையானது?உங்கள் கட்சி செயலாளர் ரில்வின் சில்வாவிடம் ஒடுக்கு முறைக்கு எதிரான சுயநிர்ணயம் என்றால் என்னவென கேளுங்கள். வடக்கு - கிழக்கில் தனித்துவ இனமாக வாழ்ந்த இனம் இன்று ஒடுக்கப்பட்டுள்ளது .இதனைப் பற்றிப் பேசும் திராணி இந்த நாட்டில் எந்தத்தலைவருக்கும் இல்லை.
தமிழர்கள் அரசியல் தீர்வு கேட்கமாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் செய்யும் மிகப்பெரிய வரலாற்றுத்தவறாகவே அது அமையும். ஜனாதிபதி ஆணைகுழுக்கள் , நல்லிணக்க ஆணைக்குழுக்களினால் எமக்கு நீதி கிடைக்கவில்லை உங்களினாலும் எமக்கு நீதி கிடைக்காது என்றே நம்புகின்றோம் இந்த சபையின் ஊடாக நான் சர்வ்தேசத்திடம் ஒரு கோரிக்கை முன்வைக்கின்றேன் . இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான நீதியை சிங்களவர்கள் தரமாட்டார்கள். சிங்களத்தலைவர்கள் அதற்கு விடமாட்டார்கள். ஆகவே சர்வதேச சமூகம் தமிழர்களுக்கான தீர்வை வழங்க தயாராக வேண்டும். தமிழர்களுக்கான தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் அது ஒரு சர்வதேச தலையீட்டுடன் மட்டும் தான் சாத்தியமாகும் என்றார்.





