இந்தியாவின் உதவிகள் வெளிப்படை தன்மையுடன் சென்றடைய வேண்டும்: ஜெய்சங்கர் வலியுறுத்து
இந்திய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 'சாகர் பந்து' திட்டத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
தித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரிடலிருந்து மீள்வதற்காக இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மக்களைச் சென்றடைய வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், சஜித்துடனான சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார். அதற்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் வழங்கக்கூடிய அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சி சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்புக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் 23-12-2025அன்று இந்திய இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இதன்போது, அண்மையில் இலங்கையைத் தாக்கிய தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 'சாகர் பந்து' திட்டத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன், இந்திய அரசாங்கத்தினால் நாட்டுக்கு 100 மில்லியன் டொலர் நன்கொடையாகவும், மேலும் 350 மில்லியன் டொலர் குறைந்த வட்டி சலுகைக் கடனாகவும் என மொத்தம் 450 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டமைக்காக, இலங்கை மக்கள் சார்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் இந்திய அரசாங்கம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
மேலும், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் பெரும் எண்ணிக்கையிலானோர் உயிரிழந்த போதிலும், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முறையான பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை நோக்கி நகர முடியாமல் போனதாலேயே, இம்முறை இலங்கையைத் தாக்கிய 'டித்வா' சூறாவளியினால் அதிகளவானோர் உயிரிழந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். இனியாவது இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நாட்டுக்குத் தேவையான சரியான பேரிடர் மேலாண்மை திட்டத்தையும் அமைச்சையும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





