விசாரணை வளையத்துக்குள் விஜேதாச: ரக்கித்த உள்ளிட்ட மூவருக்கு 17வரை விளக்கமறியல்
பிணை வழங்குவதற்கான எந்தவொரு விதிவிலக்கான காரணங்களும் முன்வைக்கப்படவில்லை எனக்கூறி, பிணை மனுக்களை நீதிவான் அசங்க எஸ். போதரகம நிராகரித்தார்.
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷவின் புதல்வர் சட்டத்தரணி ரகித்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹோரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண வருன ஆகியோர் தொடர்புபட்டுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளில், முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் தற்போது விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
இதேவேளை, மூன்று சந்தேகநபர்களினாலும் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்களை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் 03-07-2026அன்று நிராகரித்ததுடன், அவர்களை வரும் ஜூலை 17 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலகக் குழுத் தலைவர் 'ஹரக் கட்டா' எனப்படும் நந்துன் சிந்தக்கவின் மனைவியிடமிருந்து, 120 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, சந்தேகநபர்கள் 2023 மார்ச் 25 அன்று டுபாய்க்குப் பயணம் செய்து, மீண்டும் 2023 மார்ச் 29 அன்று இலங்கை திரும்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டது.
மேலும், ரகித்த ராஜபக்ஷவின் தந்தையான முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் அதே காலப்பகுதியில் டுபாயில் தங்கியிருந்ததாகவும், அவர் 2023 மார்ச் 21 அன்று இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்ததாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
முன்னாள் அமைச்சரின் இந்த டுபாய் விஜயத்தின் நோக்கம் என்ன, அங்கு அவர் யாரைச் சந்தித்தார் மற்றும் இந்த இலஞ்சக் குற்றச்சாட்டுகளுடன் அவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் தீவிரமாக விசாரித்து வருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதி, ரகித்த ராஜபக்ஷவின் தந்தையின் இல்லம் அமைந்துள்ள நாவலப்பகுதியில் உள்ளவொரு இடத்தில் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியுள்ளதாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
எனினும், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் வழக்கு விசாரணையின்போதே ஆராயப்பட வேண்டும் என்று வாதிட்டு, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு கோரினர்.
இருப்பினும், பிணை வழங்குவதற்கான எந்தவொரு விதிவிலக்கான காரணங்களும் முன்வைக்கப்படவில்லை எனக்கூறி, பிணை மனுக்களை நீதிவான் அசங்க எஸ். போதரகம நிராகரித்தார்.
மேலும் எதிர்காலத்தில் பிரதிவாதிகள் தரப்பினருக்கு எழுத்துமூலம் பிணை விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான சுதந்திரம் உள்ளதாகவும், அத்தகைய விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கு நீதிமன்றம் நேரத்தை ஒதுக்கும் என்றும் நீதிவான் தெரிவித்தார். இதனையடுத்து, சந்தேகநபர்களை ஜூலை 17 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.





