அரசாங்கத்தின் மின்சார கொள்கை வலுசக்திதுறைக்கு தண்டனை: எதிர்க்கட்சி தலைவர்
பகல் நேரத்தில் நுகர்வோரால் பயன்படுத்தப்படும் அலகுகளின் அடிப்படையில் சூரிய மின் உற்பத்திக்கு கட்டணம் செலுத்துதல் போன்ற முன்மொழிவுகள் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்படல் வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள மின்சார கொள்கை நுகர்வோருக்கும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறைக்கும் தண்டனையாகவே அமையும். இதன் மூலம் குறைந்த வருமானம் பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்களென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்க பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: தெரு விளக்குகளுக்கு நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் முன்மொழிவுகள் மற்றும் ஒரு மின் அலகுக்கு 67 ரூபா கட்டணம் விதிக்கும் நேர உபயோக முறையை அமல்படுத்தும் முயற்சிகள் அநீதியானவை.
மக்கள் தெரு விளக்குகளுக்கான கட்டணங்களை செலுத்த மறுத்தால் அதன் மூலம் சட்டம் மற்றும் ஒழுங்கை நிறைவேற்றுவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பகல் நேரத்தில் நுகர்வோரால் பயன்படுத்தப்படும் அலகுகளின் அடிப்படையில் சூரிய மின் உற்பத்திக்கு கட்டணம் செலுத்துதல் போன்ற முன்மொழிவுகள் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்படல் வேண்டும். அரசாங்கம் மின்சார கட்டணங்களை 33 சதவீதம் குறைக்கும் என்று வழங்கிய வாக்குறுதியை அவ்வாறே நடைமுறைப்படுத்த வேண்டும்.
11.57 சதவீதத்தால் கட்டணங்களை அதிகரிக்கக் கூடாது மற்றும் தேவையான அதிகபட்ச அளவிற்கு புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறைக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றுள்ளது.





