வங்கதேச தலைமை நீதிபதி பதவியை விட்டு விலகினார்
நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பதவி விலக முடிவு செய்துள்ளதாகத் தலைமை நீதிபதி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
வங்கதேச தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டு ஒரு மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். நாட்டின் நாடாளுமன்ற விவகார ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் இந்த நிலைமையை உறுதிப்படுத்தியதோடு, தலைமை நீதிபதியின் ராஜினாமா சட்ட அமைச்சகத்தை எட்டியுள்ளது என்று பங்களாதேஷ் செய்தித்தாள் தி டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது.
பதவி விலகத் தவறினால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரின் வீடுகளை முற்றுகையிடுவோம் என்று போராட்டக்காரர்கள் எச்சரித்திருந்தனர்.
"ஒரு விசேடச் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். நமது தலைமை நீதிபதி சில நிமிடங்களுக்கு முன்பு பதவி விலகினார் . அவரது பதவி விலகல் கடிதம் ஏற்கனவே சட்ட அமைச்சகத்திற்கு வந்துள்ளது. தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக தாமதமின்றி அதை ஜனாதிபதிக்கு அனுப்புவோம்" என்று ஆசிப் நஸ்ருல் தனது முகநூல் பதிவில் ஒரு காணொலிச் செய்தியில் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பதவி விலக முடிவு செய்துள்ளதாகத் தலைமை நீதிபதி ஊடகங்களிடம் தெரிவித்தார்.





