பாதிக்கப்பட்ட தரப்புக்கு செவிசாய்க்கும் தார்மீகக் கடப்பாடு கனடாவுக்கு உண்டு; கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர்
'செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகி இவ்வாரத்துடன் ஒரு மாதம் பூர்த்தியடைகின்றது.

செம்மணி மனிதப்புதைகுழியில் இருந்து கண்டறியப்படும் சான்றாதாரங்கள், யுத்தத்தின்போது காணாமல்போன கனேடியவாழ் தமிழர்களின் அன்புக்குரியவர்கள் விபத்தில் காணாமல்போகவில்லை. மாறாக அவர்கள் வலுகட்டாயமாகப் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். மௌனிக்கப்பட்டிருக்கிறார்கள். இரகசியமாகப் புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சி தலைவர் பியெர் பொய்லிவ்ர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான குற்றங்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் கூறுவதை காதுகொடுத்துக் கேட்பதற்கும், நீதிக்கான போராட்டத்தில் வலுவாக நிற்பதற்குமான தார்மீகக் கடப்பாடு கனடாவுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையைத் தாம் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, மனிதகுலத்துக்கு எதிராக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான வலுவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்குத் தொடர்ந்து அழுத்தம் வழங்குவோம் என கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சி தலைவர் பியெர் பொய்லிவ்ர் உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் 'கறுப்பு ஜுலை' கலவரம் இடம்பெற்று இவ்வாரத்துடன் 42 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், அதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள நினைவுகூரல் செய்தியிலேயே பியெர் பொய்லிவ்ர் மேற்கண்டவாறு உத்தரவாதமளித்துள்ளார்.
கனேடியவாழ் தமிழர்கள் கறுப்பு ஜுலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் இவ்வேளையில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் மிகமோசமான பாரம்பரியத்தைத் தாம் மீண்டும் வலுவாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு 'செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகி இவ்வாரத்துடன் ஒரு மாதம் பூர்த்தியடைகின்றது. அம்மனிதப்புதைகுழியில் இருந்து குழந்தைகள் உள்ளடங்கலாக பலரது மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு தொடர்பில் 1983 ஆம் ஆண்டு வலியின் எதிரொலியாக புதிய ஆதாரங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன' என்றும் பியெர் பொய்லிவ்ர் குறிப்பிட்டுள்ளார்.
'செம்மணி மனிதப்புதைகுழியில் இருந்து கண்டறியப்படும் சான்றாதாரங்கள், யுத்தத்தின்போது காணாமல்போன கனேடியவாழ் தமிழர்களின் அன்புக்குரியவர்கள் விபத்தில் காணாமல்போகவில்லை. மாறாக அவர்கள் வலுகட்டாயமாகப் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். மௌனிக்கப்பட்டிருக்கிறார்கள். இரகசியமாகப் புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான குற்றங்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் கூறுவதை காதுகொடுத்துக் கேட்பதற்கும், நீதிக்கான போராட்டத்தில் வலுவாக நிற்பதற்குமான தார்மீகக் கடப்பாடு கனடாவுக்கு இருக்கிறது. அதில் இந்தச் சுமையை நீண்டகாலமாக சுமந்துகொண்டிருக்கும் உலகவாழ் தமிழர்களுடன் உடன்நிற்பதும் உள்ளடங்குகிறது' எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.