வசந்த சமரசிங்க உள்ளிட்ட அமைச்சர்களின் சொத்து விபரங்கள் குறித்த நிலைப்பாடு என்ன?
எரிபொருள் விலையைக் குறைப்பது மாத்திரமின்றி, விலை சூத்திரத்தையும் இரத்து செய்வதாகக் கூறினர்.
தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் நளின் ஹேவகே அண்மையில் எந்தவொரு அரசியல்வாதியிடம் சொத்துக்களும், வாகனங்களும் காணப்படுகின்றதோ அவர்கள் கள்வர்கள் என்று தெரிவித்திருந்தார். அவ்வாறெனில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வசந்த சமரசிங்க உள்ளிட்ட அமைச்சர்களின் சொத்து விபரங்கள் குறித்து ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்னவென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா கேள்வியெழுப்பினார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் 17-09-2025அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எந்தவொரு அரசியல்வாதியிடம் சொத்துக்களும், வாகனங்களும் காணப்படுகின்றதோ அவர்கள் கள்வர்கள் என தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் நளின் ஹேவகே அண்மையில் தெரிவித்திருந்தார். தற்போது வசந்த சமரசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரின் சொத்து விபரங்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். வசந்த சமரசிங்க மாத்திரமின்றி அவரை விட அதிக சொத்துக்களைக் கொண்ட மேலும் பல அமைச்சர்கள் உள்ளனர் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.
ஏனைய கட்சியினரின் சொத்துக்களை தவறான கோணத்தில் ஜே.வி.பி. பார்ப்பதைப் போன்று நாம் பார்க்கவில்லை. கடந்த காலங்களில் இவர்கள் இவ்வாறான காரணிகளுக்கு எதிராகவே பிரசாரங்களை முன்னெடுத்தனர். அரசியல்வாதிகளிடம் சொத்துக்கள் இருக்கவே கூடாது என இவர்கள் மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டினர். ஆனால் தற்போது அவர்களது சொத்து விபரங்கள் வெளியானதன் பின்னர் அது அவ்வாறு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
அமைச்சர்களிடம் இவ்வாறு சொத்துக்கள் இருக்குமெனில், ஜே.வி.பி. கட்சி நிதியத்தில் எந்தளவு சொத்து காணப்படும் என்று சிந்திக்க வேண்டும். ஏனையோர் உடுத்திய ஆடைகளையே நாம் அணிவதாகக் கூறியவர்களே இவ்வாறு கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாகவுள்ளனர். ஆனால் ஓராண்டுக்குள் ஜே.வி.பி.யினர் இந்த நிலைமையிலிருந்து முன்னேற்றமடைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. முடிந்தளவு மக்களை ஏமாற்றியிருக்கின்றனர்.
ஜனாதிபதி பதவியேற்று இன்னும் ஒரு வாரத்துக்குள் ஓராண்டு நிறைவடையவுள்ளது. மின் கட்டணத்தை மூன்றில் இரண்டு மடங்கால் குறைப்பதாகக் கூறியவர்கள் தற்போது மீண்டும் 8 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான முன்மொழிவை சமர்ப்பித்துள்ளனர். ஓராண்டுக்குள் மூன்றாவது முறையாக கட்டணத்தை அதிகரிக்கவுள்ளனர். எரிபொருள் விலையைக் குறைப்பது மாத்திரமின்றி, விலை சூத்திரத்தையும் இரத்து செய்வதாகக் கூறினர். ஆனால் இன்று எரிபொருள் விலையும் குறைக்கப்படவில்லை, சூத்திரத்திலும் ஒரு எழுத்து கூட நீக்கப்படவுமில்லை.
குடும்ப ஆட்சி முற்றாக நீக்கப்படும் எனக் கூறியவர்கள் என்று குடும்பத்தவர்களுக்கு இராஜதந்திர நியமனங்களைக் கூட வழங்கியுள்ளனர். உத்தியோகபூர்வ இல்லங்கள், அரச வாகனங்களை தாம் பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனக் கூறியவர்கள் இன்று சகல சிறப்புரிமைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஜே.வி.பி.யின் உண்மையான முகம் எது என்பதை மக்கள் தற்போது தெரிந்து கொண்டுள்ளனர் என்றார்.





