மலையக சிவில் அமைப்புக்கள் ஏப்ரலில் பாரிய ஆர்ப்பாட்டம்
எந்தவொரு குறுகிய கால பேரிடர் நடவடிக்கையும் மலையகத் தமிழ் மக்களின் நீண்ட கால காணி மற்றும் வீட்டு உரிமை கோரிக்கைகளுக்கு முரணாகவோ அல்லது சமரசம் செய்வதாகவோ இருக்கக் கூடாது.
தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் குடும்பங்களின் அவல நிலையைத் தீர்க்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அது தொடர்பில் எவ்வித சாதகமான பதிலும் இதுவரையில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த இவ்வமைப்பு, இதனை வலியுறுத்தி எதிர்வரும் ஏப்ரலில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ள இந்த கோரிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடலொன்று நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். குறித்த யோசனைகளில் பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கைகளும் 19-03-2026 அன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பேரழிவின் பின் பல மாதங்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் குடும்பங்கள் நிர்க்கதியான நிலையிலேயே இன்னும் துன்பப்படுகின்றனர். நாட்டின் ஏனைய பகுதிகளில் சுமுகமான நிலைமையை நோக்கிய நிவாரண. புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்றாலும் பாதிக்கப்பட்ட தோட்டப் பகுதிகளிலே இவை மிகவும் மந்த கதியிலேயே நடைபெறுவதாக இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தற்காலிக முகாம்களிலும், கூடாரங்களிலும், பழைய தோட்டக் கட்டிடங்களிலும் இன்னும் தீரவின்றி தவிக்கின்றனர். மேலும் பலர் பாதுகாப்பற்ற வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
மீள்குடியேற்றத்துக்கான காணிகள் விடுவிப்பது குறித்து இன்னும் தெளிவற்ற தன்மையே காணப்படுகிறது. அரசாங்கம் அறிவித்த நிவாரணத்தையும் இழப்பீட்டையும் பெறுவதில் காணி உரிமையின்மை ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.
தோட்டப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்யும் பொறுப்பு கம்பனிக்கா அல்லது அரசாங்கத்துக்கா எனும் இழுபறி இன்னும் நீடிக்கின்றது. அரசாங்கத்தின் கொள்கைத் தெளிவின்மையும், மந்த கதியிலான செயல்பாடுகளுமே இதற்கு பிரதான காரணங்களாக காணப்படுவதாகவும் இந்த கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது.
எனவே தித்வா பேரிடர் மலையகத் தமிழ் சமூகம் மீது ஏற்படுத்திய பாரிய தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதியிடம் 15 அம்ச கோரிக்கைளை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியிடம் முன்வைக்கப்படவுள்ள கோரிக்கைகளாவன:
பாதிக்கப்பட்ட மலையகக் குடும்பங்களுக்கு முழுமையாகச் சேதமடைந்த மற்றும் மீள்குடியேற்ற வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாவும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு 25 இலட்சம் ரூபாய் வரையும், தேவைப்படின் காணிக்கு மேலதிகமாக 50 இலட்சம் ரூபாய் வரையும் வழங்கப்பட வேண்டும்.
நாட்டின் ஏனைய பிரஜைகளுக்குச் சமமாக எவ்வித பாரபட்சமுமின்றி தகைமையுள்ள மலையக மக்களுக்கும் வீடு மற்றும் ஏனைய பாதிப்புகளுக்கான நிவாரணம் மற்றும் நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். தோட்டத்தில் வேலை செய்பவர்கள் வேலை செய்யாதபவர்கள் என்ற பாகுபாடு அனர்த்த நிவாரண மற்றும் மீள்கட்டுமானத்தில் காண்பிக்கக் கூடாது.
மலையக மக்களுக்கு இந்நாட்டின் நிலத்தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் தோட்டப் பகுதிகளில் காணி உறுதியுடன் கூடிய தனி வீடுகள் வழங்கப்படல் வேண்டும். தோட்டப் பகுதிகளில் மாடி வீட்டுத் திட்டங்கள் வேண்டாம். இந்திய வீடமைப்புத் திட்டத்தை தித்வா பேரிடர் நிவாரணத்துக்கு பயன்படுத்தக கூடாது. அது தனி திட்டமாக துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தித்வா வீடமைப்புத் திட்டங்கள் முறையான வீதிகள், முகவரி, மின்சாரம், குடிநீர், சமூகக் கட்டமைப்புகள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் கொண்ட கிராமங்களாக மலையக குடியேற்றங்கள் மீள்கட்டமைக்கப்பட வேண்டும். தோட்ட முறைமை ஒழிந்து புதிய கிராமங்களாக நிலைமாற்றம் பெற வழிவகுக்க வேண்டும்.
காணி உரிமை வழங்கவும், புதிய கிராமங்களை உருவாக்கவும் பெருந்தோட்டக் கம்பனிகளுடனான குத்தகை ஒப்பந்தங்கள் உடனடியாக திருத்தப்பட வேண்டும். தற்காலிக முகாம்களில், கூடாரங்களில் மற்றும் ஏனைய இடங்களில் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களை அலைக்கழிக்காமல் கண்ணியத்துடனும், கௌரவத்துடனும் நடத்தி, அவர்களுக்கு வீடுகளுக்கான காணி தெரிவு செய்யும் போது குடும்பங்களுடன் கலந்தாலோசித்து தீர்மானங்கள் எடுக்க வேண்டும்.
காணிக்கான உரிமை பெண்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். காணி உரிமையுடன் கூடிய நிரந்தர வீட்டுத் தீர்வு கிடைக்கும் வரை சர்வதேசத் தர வீடுகள் அடிப்படை வசதிகளுடன் உசிதமான இடங்களில் உடனடியாக வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் குடும்பங்களுக்கான அரச நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை (விவசாயம், கால்நடை தொழில் வாழ்வாதாரம் என்பன) வழங்கும் போது வெறும் சமத்துவத்திற்கு அப்பால் நீதியான அணுகுமுறையை அரசு கடைபிடிக்க வேண்டும்.
இலங்கையின் ஏனைய பிரஜைகள் போலவே பெருந்தோட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் சேவைகள் என்பன பிரதேச செயலகம், மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக வழங்கப்பட வேண்டும். கம்பனி மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக அல்ல. மலையகத் தமிழரின் மொழி உரிமை மதிக்கப்பட வேண்டும் அனைத்து விண்ணப்பப் படிவங்கள். அறிவித்தல்கள் மற்றும் தொடர்பாடல்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும். அரச அலுவலகங்கள் இக்குடும்பங்களுடன் தமிழில் தொடர்பு கொள்வதை உறுதி செய்தல் வேண்டும்.
நிவாரணம், நஷ்டஈடு பெற்றுக்கொள்வதில் சிரமம், குறைகள் இருப்பின் அவற்றை முறைப்பாடு செய்து தீர்வுகள் பெற குறைதீர் ஏற்பாடுகள் பிரதேச, மாவட்ட தேசிய மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும். எந்தவொரு குறுகிய கால பேரிடர் நடவடிக்கையும் மலையகத் தமிழ் மக்களின் நீண்ட கால காணி மற்றும் வீட்டு உரிமை கோரிக்கைகளுக்கு முரணாகவோ அல்லது சமரசம் செய்வதாகவோ இருக்கக் கூடாது.
தோட்டப் பிரதேசங்களில் தித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட பாலங்கள், வீதிகள். படிகட்டுகள், பாதுகாப்புச் சுவர்கள் சமூக கட்டிடங்கள் என்பவற்றைச் சீர்திருத்தும் பொறுப்பை அரசாங்கம் எடுக்க வேண்டும். பிரதேச சபைகள் தோட்ட உட்கட்டுமான பணிகளுக்கு நிதியீட்டம் செய்யலாம் என்ற சட்டத் திருத்தத்தை உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.





