மாகாணசபைத் தேர்தல் முறைமையில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு
மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறைமையில் நடத்துவதாயின் அதற்கு உள்வாங்கப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்குதல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு புதிய யோசனை ஒன்றை செயற்குழுவில் முன்வைத்தது.
இந்த புதிய முறைமை குறித்து முழுமையான விளக்கமளிக்குமாறு குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியதற்கமைய எதிர்வரும் 21 (செவ்வாய்க்கிழமை) குழு மீண்டும் கூடவுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்ந்து விதப்புரை மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கான பாராளுமன்ற விசேட செயற்குழு நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அதன் தலைவர் வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் கூடியது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது மாகாணசபைத் தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்துக்கு 33 சதவீத ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற யோசனையை பெண் பாராளுமன்ற ஒன்றியம் முன்வைத்தது.
33 சதவீத ஒதுக்கீடு தொடர்பில் குழுவுக்கு போதுமான விளக்கமளிக்காத நிலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களை ஆராய்ந்து அதன் சதவீத ஒதுக்கீடுகளுடன் புதிய ஒதுக்கீட்டு முறைமையை இணைத்து எவ்வாறு புதிய ஒதுக்கீட்டை வழங்குவது தொடர்பில் எதிர்வரும் கலந்துரையாடல்களின் போது தெளிவுப்படுத்துவதாக பெண் பாராளுமன்ற ஒன்றியத்தினர் குறிப்பிட்டனர்.
இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு மாகாணசபைத் தேர்தல்களில் பெண் பிரதிநிதித்துவத்துக்கு 25 சதவீத ஒதுக்கீடுகளை வழங்குவது குறித்து புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த முறைமை தொடர்பில் எதிர்வரும் காலப்பகுதியில் நடைமுறை சார்ந்த விடயங்களை தொடர்புப்படுத்தி விளக்கமளிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டார்.
மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறைமையில் நடத்துவதாயின் அதற்கு உள்வாங்கப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள யோசனைகள் மற்றும் அவதானிப்புக்களை சட்டவரைவாக்குவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு குழு தீர்மானித்துள்ளது.





