வெளிநாடு செல்வதற்கான பயணத்தடையை தற்காலிகமாக தளர்த்துமாறு சஜின் வாஸ் விடுத்த கோரிக்கை
அது தொடர்பான ஆவணங்களைப் பரிசீலித்த நீதிவான், இந்த அவசரக் கோரிக்கையை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசியானது, மேல் நீதிமன்றத்திற்காகத் தயாரிக்கப்பட்ட ஒன்று என சுட்டிக்காட்டினார்.
வெளிநாடு செல்வதற்காக நீதிமன்றம் விதித்துள்ள பயணத்தடையைத் தற்காலிகமாகத் தளர்த்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய, சத்தியக்கடதாசி ஒன்றை மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஊழல் வழக்கொன்றில் சந்தேகநபராகப் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நகர்த்தல் பத்திரம் , 19-06-2026 அன்று கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதன்போது, சந்தேகநபரான சஜின் வாஸ் குணவர்தன சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி ஜீவந்த ஜயதிலக விடயங்களை முன்வைக்கையில், எனது சேவைபெறுநர் தனிப்பட்ட விடயமொன்றுக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால், அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையை தற்காலிகமாக தளர்த்தி உத்தரவிடுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அது தொடர்பான ஆவணங்களைப் பரிசீலித்த நீதிவான், இந்த அவசரக் கோரிக்கையை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசியானது, மேல் நீதிமன்றத்திற்காகத் தயாரிக்கப்பட்ட ஒன்று என சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இந்த வழக்கு நடவடிக்கைகளுக்காகத் தனியானதொரு சத்தியக்கடதாசியைச் சமர்ப்பித்து, குறித்த கோரிக்கைக்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். முறையான ஆவணங்களுடன் எதிர்வரும் திகதியொன்றில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கும் அறிவித்தல் ஒன்றை வழங்கி, இக்கோரிக்கையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர் தரப்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றுக்கு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை முறையற்ற வழிகளில் சம்பாதித்தமை தொடர்பில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





