விடுதலை புலிகள் அமைப்பை அழித்த இராணுவத்தினர் பழிவாங்கப்படுகிறார்கள் - பாட்டலி சம்பிக்க
பலவீனமான நிர்வாக கட்டமைப்பினால் சகல தரப்பிலும் அரசியல் அழுத்தம் தீவிரமடைந்துள்ளதை காண முடிகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்து, நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாத்த இராணுவ உயர் அதிகாரிகள் இன்று அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் சகல தரப்பினரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க அழைப்பு விடுத்தார்.
குருநாகல் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல்வேறு வாக்குறுதிகளை குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்தார். ஆனால் இன்றுவரை அந்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. ஒட்டுமொத்த பொருளாதார சுமையும் நாட்டு மக்கள் மீதே திணிக்கப்பட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்தை தவிர்த்து பொருளாதார மீட்சிக்கு எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது.
பலவீனமான நிர்வாக கட்டமைப்பினால் சகல தரப்பிலும் அரசியல் அழுத்தம் தீவிரமடைந்துள்ளதை காண முடிகிறது.நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் இதற்கு சிறந்த உதாரணமாகும். பொறுப்பினை ஏற்று நீதியமைச்சர் பதவி விலக வேண்டும்.
நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்ற நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை இதனுடன் தொடர்பு;படுத்தி ஆளும் தரப்பினர் பேசுகிறார்கள். சிறந்த நாகரிகமான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு தான் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. ஆகவே கடந்த காலத்தை விமர்சித்துக் கொண்டிருக்காமல் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் அமைப்பை முழுமையாக அழித்து, நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாத்த இராணுவ அதிகாரிகள் இன்று அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளார்கள். முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உட்பட இராணுவ உயர் அதிகாரிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். பிரபாரகரனுக்கு பக்கபலமாக இருந்த கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை இந்த அரசாங்கம் பாதுகாக்கிறது.
தேசியத்தை பாதுகாக்கும் அனைவரும் இதற்கு எதிராக ஒன்றுப்பட வேண்டும். சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. தற்போது வலுவாக செயற்பட்டால் தான் எதிர்கால சவால்களை வெற்றிக்கொள்ள முடியும் என்றார்.





