நாட்டை மீட்டெடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றினைய வேண்டும் -வணவாசி ராகுல தேரர்
மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கான தீர்வுகளை மட்டுமே எதிர்பார்க்கின்றனர்.
எதிர்க்கட்சி என்ற பெயரில் மக்களை அரசியல் ரீதியாகப் பிரித்து வைத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிராகச் செயற்படுவதை விடுத்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து நாட்டுக்கு பொருத்தமான ஒரு முறையான வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தேசிய நாமல் உயன வனப்பூங்காவின் பாதுகாவலர் ராகுல தேரர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பாக 31-05-2026 அன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், அரசாங்கத்தின் அதிகாரிகள் அல்லது அமைச்சர்களின் அனுபவமின்மை காரணமாக சில சந்தர்ப்பங்களில் சரியான தீர்மானங்களை எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். இத்தகைய சவாலான தருணத்தில், அதிகாரிகள் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத சூழலும் உருவாகலாம். எனவே, இவ்வாறான சவால்களை முறியடிக்க, அரசாங்கம் அனைத்துத் தரப்பினருடனும் விரிவாகக் கலந்துரையாடி, நாட்டுக்கு பொருத்தமான ஒரு முறையான வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது எனது அவசரமான வேண்டுகோளாகும்.
எதிர்க்கட்சி என்ற பெயரில் மக்களை அரசியல் ரீதியாகப் பிரித்து வைத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிராகச் செயற்படுவதை விடுத்து, அந்தத் தரப்பிலும் அனுபவம் வாய்ந்த, நேர்மையான மற்றும் தூய்மையான அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதை உணர வேண்டும். எனவே, கட்சி பேதங்களையும், இன, மத வேறுபாடுகளையும் மறந்து, ஜனாதிபதிக்கும் தற்போதைய அமைச்சரவைக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தற்போதுள்ள அரசியல் சூழலில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் போட்டியிடுவதை விட, நாட்டைப் பாதுகாக்க வேண்டியதே முதன்மையான கடமையாகும். ஏனெனில், தற்போதைய பொருளாதார வீழ்ச்சி மற்றும் நாடு சென்று கொண்டிருக்கும் பாதையைக் கருத்திற்கொள்கையில், எந்தவொரு தனி அரசாங்கத்தாலும் அல்லது தனிப்பட்ட தலைவராலும் மாத்திரம் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது இயலாத காரியமாக மாறியுள்ளது.
வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாம் நாட்டை மீட்டெடுக்கத் தவறினால், அடுத்ததாக ஆட்சிக்கு வரும் எந்தவொரு தலைவராலும் இழந்த காலத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு நாடு அதலபாதாளத்திற்குச் சென்றுவிடும். உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் எமது நாட்டுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது உண்மைதான். இருப்பினும், எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற அன்றாடப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு, இந்த உலக நெருக்கடிகள் பற்றியோ அல்லது பிற காரணங்கள் பற்றியோ கவலை இல்லை.
மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கான தீர்வுகளை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். எனவே, மக்களின் மனப்பாங்கிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களும் தியாகத்துடன் அரசாங்கத்திற்குத் தமது முழுமையான ஆதரவை வழங்கி, நாட்டை கட்டியெழுப்புவதற்குத் தேவையான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றார்.





