நட்புறவும் மிக நீண்ட தூரம் பரந்து விரிந்தது - மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு
இந்து சமுத்திரம் எங்கும் எதிரொலிக்கும் ஒரு உண்மை என்னவென்றால், 'வானத்தின் எல்லை மிகப்பெரியது.
மாலைதீவு - இலங்கை இடையிலான நட்புறவும் மிக நீண்ட தூரம் பரந்து விரிந்தது என்றாலும், அது எப்போதும் பொதுவான நோக்கம் கொண்டது என்று மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட விசேட இராப்போசன விருந்து உபசாரம் 05-05-2026 அன்று கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மாலைதீவு வரலாற்றின் நீண்டகாலப் பங்காளியான இலங்கைக்கு வருகை தருவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சந்தர்ப்பம் வெறும் இராஜதந்திரக் கொண்டாட்டம் மட்டுமல்லாது, இரு தீவு தேசங்களையும் இணைக்கும் பாரிய சமுத்திரத்தைப் போன்று மென்மையான மற்றும் ஆழமான நட்புறவின் கொண்டாட்டமாகும்.
பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளின் கடற்கரைகளுக்கு இடையே மோதும் அலைகள், வர்த்தகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளை விட மேலான ஒன்றைக் கொண்டு வந்தோம். அதன் மூலம் நம்பிக்கை, அன்பு மற்றும் போட்டியின்றி ஒத்துழைப்புடன் வாழக்கற்றுக்கொண்ட இரு தேசங்களின் போக்கை வெளிக்காட்டுகிறது. எளிமையான, உண்மையான மற்றும் நிலையான இந்த மனிதாபிமான தொடர்புகள் இரு தேசங்களையும் பிணைக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு உண்மையான மரியாதையின் அடிப்படையில் அமைந்தது, காலத்தால் ஏற்பட்ட சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இலங்கை தனது நிலையான நட்புக்கரத்தை மாலைதீவை நோக்கி நீட்டியுள்ளது. மாலைதீவை கட்டியெழுப்பியுள்ள அடித்தளத்தை வடிவமைப்பதற்கும் அதன் முன்னேற்றத்தைப் போஷிப்பதற்கும் இலங்கை வழங்கிய ஆதரவிற்கு மாலைதீவு மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.
சமுத்திரத்தின் ஊடாக இலங்கை மற்றும் மாலைதீவுகள் பிரிக்கப்படவில்லை. மாறாக அது இரு நாடுகளையும் ஒன்றிணைக்கிறது. இந்தியப் பெருங்கடல் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் ஒரு சமுத்திரமாக இருப்பதை உறுதி செய்வதற்கு இரு நாடுகளிடமும் உள்ள மிகப்பெரிய பலம் அந்த ஒற்றுமையாகும்.
தற்போதைய உலகம் எதிர்கொள்ளும் சவால், காலநிலை மாற்றம் சிறிய நாடுகள் உயிர்வாழ்வதற்கும் முன்னேறுவதற்கும் உள்ள உரிமையாகும். காலநிலை தொடர்பான நியாயத்திற்காகவும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். புத்தாக்கம், பின்னடைவுகளைத் தாங்கும் திறன் மற்றும் உலகளாவிய ஆலோசனை ஆகியவற்றின் ஊடாக இரு நாடுகளும் எதிர்கொள்ளும் அனைத்து அபாயங்களையும் ஒரு கூட்டான சக்தியாக மாற்றிக்கொள்ள வேண்டும். இரு நாடுகளின் இராஜதந்திர உறவுகளுக்கு அர்த்தம் கொடுப்பது இரு நாட்டு மக்களுமே ஆகும்.
எழுத்தறிவு, சுகாதார சேவைகள் மற்றும் மனித அபிவிருத்தி ஆகிய துறைகளில் இலங்கை அடைந்துள்ள சாதனைகள் மாலைதீவுக்கு நீண்டகாலமாக முன்மாதிரியாக இருந்து வருகிறது. எதிர்காலத்தை நோக்கும்போது, இளைஞர்களை வலுப்படுத்தும் மற்றும் இரு நாடுகளின் சமூகங்களையும் மேம்படுத்தும் கல்வி, பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கி, இந்த உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.
அவ்வாறு வளர்க்கப்படும் ஒவ்வொரு மாணவரும், குணப்படுத்தப்படும் ஒவ்வொரு உயிரும் மற்றும் ஊக்குவிக்கப்படும் ஒவ்வொரு மனமும் மிகவும் அமைதியான மற்றும் வளமான பிராந்தியத்திற்கான முதலீடாகும்.
மாலைதீவு - இலங்கை இடையிலான நட்புறவானது வெறும் அறிக்கைகளில் மாத்திரம் எழுதப்பட்ட ஒன்றல்ல. அது இரு நாடுகளினதும் கொடிகள், மொழிகள் மற்றும் உணவு முறைகள் குறித்து அறிந்து, வளரும் எமது பிள்ளைகளின் புன்னகையிலேயே உயிர்வாழ்கிறது.
தலைமுறை தலைமுறையாக இரு நாட்டுப் பிரஜைகளுக்கும் இடையில் பரிமாறப்படும் அந்த நெருக்கம் மற்றும் ஒரு தேசம் மற்றுமொரு தேசத்தின் வெற்றியைத் தமதாகக் கருதி கொண்டாடும் போது ஏற்படும் அமைதியான பெருமிதம் ஆகியவற்றிலேயே அந்தப் பிணைப்பு நிலைத்திருப்பதாகும்.
இவ்வாறான பிணைப்புகளை செயற்கையாக உருவாக்கிவிட முடியாது. அவை உணரப்பட வேண்டியவை, அனுபவிக்கப்பட வேண்டியவை மற்றும் போற்றப்பட வேண்டியவையாகும்.
இந்து சமுத்திரம் எங்கும் எதிரொலிக்கும் ஒரு உண்மை என்னவென்றால், 'வானத்தின் எல்லை மிகப்பெரியது. ஆனால் அது எப்போதும் வானத்தையும் கடலையும் ஒன்றிணைக்கின்றது. மாலைதீவு - இலங்கை இடையிலான நட்புறவும் மிக நீண்ட தூரம் பரந்து விரிந்தது என்றாலும், அது எப்போதும் பொதுவான நோக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை உள்ள இடத்தில் ஒன்றிணைகிறது என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாலைதீவு ஜனாதிபதி சிறப்பு குறிப்பு ஒன்றை பதிவிட்டதோடு, நாட்டுத் தலைவர்களும் நினைவுப் புத்தகத்திலும் அவர் கையொப்பமிட்டார்.





