78 ஆவது சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனம் - வட, கிழக்கில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு பேரணிகள்
கிளிநொச்சியில் கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக பேரணி ஆரம்பமாகும் எனவும், கிழக்கில் கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்கா வரை பேரணி இடம்பெறும் எனவும் அறியமுடிகின்றது.
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினமான 04-02-2026 அன்று கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பேரணிக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், தமிழ் அரசியல் தலைவர்கள், பொதுமக்களென சகல தரப்பினரும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
வருடாந்தம் சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் ஏனைய சகல தரப்பினரதும் ஆதரவுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது வழமையாகும்.
அந்தவகையில் இவ்வருடமும் இன்றைய தினம் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய எதிர்ப்புப்பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இப்பேரணிகள் ஆரம்பமாகும் இடங்கள் பற்றிய குறிப்பான விபரங்கள் இச்செய்தி எழுதும் நேரம் வரை ஏற்பாட்டுக்குழுவினரால் பகிரங்கமாக வெளியிடப்படாத நிலையில், கிளிநொச்சியில் கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக பேரணி ஆரம்பமாகும் எனவும், கிழக்கில் கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்கா வரை பேரணி இடம்பெறும் எனவும் அறியமுடிகின்றது. அத்தோடு இப்பேரணிகளுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்படும் பட்சத்தில், அதனை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.





