தமிழகத்திலிருந்து நாட்டை வந்தடைந்த 950 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்கள்
சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் ஏற்றிய கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
தித்வா புயலால் நாடளாவிய ரீதியில் 21 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்தும் சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கப் பெற்று வருகின்ற நிலையில், மெற்றிக் தமிழகத்திலிருந்து மற்றுமொரு பாரிய நிவாரண பொருட்கள் கப்பல் ஊடாக நாட்டை வந்தடைந்தன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் கப்பல் பணிக்குழுவினரை வரவேற்றதோடு, நிவாரணப்பொருட்களையும் பொறுப்பேற்றனர். தமிழக மாநில அரசினால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களுடன் சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பலொன்றே இவ்வாறு நாட்டை வந்தடைந்தது.
சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் ஏற்றிய கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழகத்திற்கான இலங்கை துணைத் தூதுவர் வைத்தியர். கணேசநாதன் கேதீஸ்வரன் உட்பட தமிழக அரசின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தன். உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மொத்தமாக 950 மெற்றிக் தொன் பொருட்கள் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த 950 மெற்றிக் தொன் நிவாரணப் பொதிகளில் பருப்பு, சீனி மற்றும் பால் மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பெருமளவில் உள்ளடங்குகின்றன. அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 10,000 துவாய்கள், 5,000 சேலைகள், 5,000 வேட்டிகள், 10,000 படுக்கை விரிப்புகள் மற்றும் 1,000 தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இந்தக் கப்பல்கள் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





