25 பெண் கைதிகள் உட்பட 106 சந்தேக நபர்களும் செப்டம்பர் 17 வரை விளக்கமறியல்
கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 20 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், நீர்கொழும்பு பெண்கள் சிறைச்சாலையைச் சேர்ந்த 25 பெண் கைதிகள் புதிதாக சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
குறித்த வழக்கு நீர்கொழும்பு நீதிவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் 10-09-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விசாரணை அதிகாரிகள் இதனை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
அதற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 81 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் அடங்கலாக மொத்தம் 106 பேர் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், குறித்த பெண் சந்தேகநபர்களுக்கு எதிராகப் பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதால் வழக்கு முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், புதிதாகப் பெயரிடப்பட்ட பெண் சந்தேகநபர்களையும், 30 ஆம் இலக்கம் முதல் 60 ஆம் இலக்கம் வரை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துவதுக்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறும், சாட்சியாளர்களான 20 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்குமாறும் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.
23 சந்தேகநபர்கள் (இலக்கம் 7 முதல் 30 வரை) அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சாட்சியாளர்களாக ஆஜரான சிறைச்சாலை அதிகாரிகளால் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைகளுக்கு அனுமதிவழங்கிய நீதிவான், சந்தேகநபர்கள் 106 பேரையும் எதிர்வரும் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
மேலும், அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தாத ஏனைய சந்தேகநபர்களை நிகழ்நிலை ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு (1) உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் சந்தன களுஆரச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த மேலதிக விசாரணை அறிக்கையை நேற்று மன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 20 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொதுச்சொத்துச் சட்டம், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் மனித படுகொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.





