கைதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் ஒருங்கிணைந்த பொறிமுறை அவசியம்
சிறையில் உள்ள கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களாவர்.
தற்போதைய சிறைச்சாலை தொகுதியில் நிலவும் கடுமையான நெருக்கடி நிலைமையை சரியாக புரிந்து கொள்ளாமையினால் பாரிய பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது. சிறைச்சாலை நெருக்கடிக்கு தற்காலிக தீர்வுகள் பொருத்தமற்றவை. எனவே அரசாங்கம் கைதிகளின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கும் ஒருங்கிணைந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி சிறைச்சாலை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா வலியுறுத்தினார்.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் காரியாலயத்தில் 08-08-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: நாட்டில் உள்ள சிறைச்சாலை தொகுதி வெடிக்கும் நிலையை எட்டியுள்ளதாக அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தோம். 18,000 கைதிகளை மட்டுமே வைப்பதற்கான வசதிகள் உள்ள சிறைச்சாலை தொகுதியில், தற்போது 43,000 வரையிலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒருவருக்கு நால்வர் என்ற விகிதத்தில் மிக நெருக்கடியான முறையில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த உண்மையான பிரச்சினையை மூடிமறைத்து விட்டு, அரசாங்கம் இதற்கு வேறு விதமான அர்த்தங்களை கற்பிக்க முற்படுகிறது.
தற்போதைய சட்டங்களும் அவசியமற்ற முறையில் கைதிகளை சிறைக்குள் அனுப்புவதற்கும், நீண்ட காலம் கைதிகள் சிறைக்குள் இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்குவதற்குமே அமைக்கப்பட்டுள்ளன. நச்சுப்பொருட்கள், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் 54 ஆவது பிரிவின் கீழ், 10 கிராமுக்கு மேல் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு மேல் நீதிமன்றத்தினாலேயே பிணை வழங்க முடியும். அதற்கு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை தேவைப்படுவதால், அந்த அறிக்கையைப் பெற ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் ஆகிறது. இதனால் கைதிகள் அந்த காலப்பகுதியை சிறையிலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் உண்மையான நிலைமையை புரிந்து கொள்ளாமல் இதனை ஒரு சதித்திட்டம் என்றோ அல்லது அரசியல் தேவைக்காக நடக்கிறது என்றோ கூறினால், வாழ்நாளில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. தும்பரை, களுத்துறை, காலி, மெகசின், வெலிக்கட ஆகிய சிறைச்சாலைகளில் சதித்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுவதாக அரசாங்கம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஜூலை 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெடித்தது இந்த உண்மையான நெருக்கடியின் வெளிப்பாடே ஆகும். அங்கு கைதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, அவர்கள் மீது சித்திரவதைகளை மேற்கொள்வதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிறையில் உள்ள கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களாவர். 2007 ஆம் ஆண்டு 54 ஆம் இலக்க போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளித்தல் மற்றும் சிகிச்சை அளித்தல் சட்டத்தின் கீழ் மறுவாழ்வு மையங்களை அமைத்து சிகிச்சை அளிக்க முடியும் என்ற போதிலும், அச்சட்டம் பக்கவாட்டில் தள்ளிவைக்கப்பட்டு, பாரம்பரியமாக நான்கு சுவர்களுக்குள் கைதிகளை பூட்டி வைக்கும் முறையே தொடர்கிறது.
சிறைச்சாலை நெருக்கடிக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள போதிலும், அதில் கைதிகள் தரப்பின் கருத்துக்கள் எவையும் பெற்றுக்கொள்ளப்படவில்லை. பொலிஸார் மற்றும் முப்படையினரைக் கொண்டு ஒருதலைப்பட்சமாக திணிக்கும் தீர்வுகள் தற்காலிகமானவையே. நிரந்தர தீர்வு காண வேண்டுமாயின் கைதிகளின் கோரிக்கைகளுக்கும் கவலைகளுக்கும் அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும். அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ள கைதிகளின் உயிர்களுக்கும் பிரச்சினைகளுக்கும் அரசாங்கமே நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும் என்றார்





