இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை - பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா
இஸ்ரேலுக்கான தொழிலாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் முறைகேடுகள் மற்றும் ஊழல் இடம்பெற்றதாகவும், ஆட்சேர்ப்புக்காக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரியப்படுகிறது.
இஸ்ரேலில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவும், ஆட்சேர்ப்பு நடைமுறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை. நிவர்த்தி செய்யவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20-08-2026 அன்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சாமர சம்பத் தசநாயக்க எம் பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சாமரசம்பத் எம்.பி. தமது கேள்வியில், தற்போது, சுமார் 30,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் தொழில்புரிந்து வருகின்றார்கள்.
குறிப்பிட்ட சில வேலைப் பிரிவுகளில் பணியாற்றுவதற்காக இஸ்ரேலுக்குச் சென்ற சுமார் 7,000 பேர் பின்னர் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளதுடன், அகதி அந்தஸ்தையும் கோரியுள்ளனர்.
இவ்வாறான தொழிலாளர்களின் நிலை தொடர்பில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அரசாங்கங்கள் தலையிட்டுள்ளதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் தலையிட முடியுமா என்று கேட்கிறேன் என்றார்.
அதற்கு பிரதியமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பும் நடைமுறையில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தாம் வழங்கிய பட்டியலை இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபைக்கு அனுப்புமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உரிய நடைமுறைகளின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கான தொழிலாளர்களைத் தெரிவுசெய்து கொண்டிருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
இஸ்ரேலின் விவசாயத் துறையில் பணியாற்றுவதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சில இலங்கைத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் செல்லவிருந்த வேலைப் பிரிவு தொடர்பில் உரிய முறையில் விளக்கமளிக்கப்படவில்லை.
இதன் காரணமாக, சில தொழிலாளர்கள் பின்னர் வேறு வேலைகளில் இணைந்ததுடன், அகதி அந்தஸ்தையும் கூறியுள்ளனர்.அவர்களின் நிலையைச் சரிசெய்வதற்காக இஸ்ரேலிய அதிகாரிகள் முன்னர் ஒரு பொது மன்னிப்புக் காலத்தை வழங்கியிருந்தனர்.
எனினும், அந்த காலப்பகுதியில் இஸ்ரேலில் இருந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கான உரிய தலையீட்டை அன்றைய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
அதற்கு மாறாக ஏற்கனவே இஸ்ரேலில் இருந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக சுமார் 6,000 புதிய இலங்கைத் தொழிலாளர்களை அனுப்புவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இஸ்ரேலுக்கான தொழிலாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் முறைகேடுகள் மற்றும் ஊழல் இடம்பெற்றதாகவும், ஆட்சேர்ப்புக்காக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரியப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவும், ஆட்சேர்ப்பு நடைமுறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைச் சரிசெய்யவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாதிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.





