மாகாண சபை தேர்தல் தடுமாறும் அநுர அரசு
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தனிநபர் பிரேரணையை முன்வைத்துள்ளார்.
இலங்கையின் அரசியல் பரப்பில் மாகாண சபைத் தேர்தல்கள் என்பது நீண்ட காலமாக இழுபறிக்குள்ளாகி வரும் பிரதான பேசு பொருளாகும். தற்போதைய அரசாங்கத்தின் கீழாவது இத்தேர்தல்கள் விரைவாக நடாத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்பட்ட போதிலும், அண்மைக்கால நகர்வுகள் அரசாங்கத்தின் மத்தியில் ஒருவித அரசியல் தடுமாற்றம் நிலவுவதையே வெளிக்காட்டுகின்றன.
இச்சூழலில், ஜே.வி.பி அல்லது தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மைய முகமாக விளங்கும் ரில்வின் சில்வாவின் கருத்துக்கள், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் அமைச்சரவை பேச்சாளரின் விளக்கங்கள் முரண்பட்டு நிற்கையில் எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான சவால்கள் மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் என்பன மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தை மீண்டும் சூடான அரசியல் களமாக மாற்றியுள்ளன.
அரசாங்கத்தில் எந்தப்பதவிகளிலும் இல்லாத ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளரான ரில்வின் சில்வா மாகாண சபைத் தேர்தல் இந்தாண்டு நடைபெறாது என்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்கள், ஆட்சியாளர்களின் தற்போதைய முன்னுரிமைகள் எவை என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளன.
நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் புதிய அரசியல் கலாசாரத்தை நிலைநிறுத்துதல் போன்ற முதன்மைப் பணிகளுக்கு மத்தியில், மாகாண சபை முறையின் தற்போதைய கட்டமைப்பு மற்றும் அதன் செலவினங்கள் குறித்து அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை அவரது தொனி சுட்டிக்காட்டுகிறது.
தேர்தல் முறையியல் மற்றும் எல்லை மறுநிர்ணயம் போன்ற தொழில்நுட்பச் சிக்கல்கள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில், அவசர அவசரமாகத் தேர்தலுக்குச் செல்வது மேலும் குழப்பங்களை விளைவிக்கும் என்ற யதார்த்தத்தை அவர் முன்வைக்கிறார். ஆனால் அவர் கொள்கை அளவில் மாகாண சபை முறைமையை எதிர்த்தவர் என்பது இங்கு மறுப்பதற்கல்லாத விடயமாகும்.
எனினும், ஜனநாயகத்தின் அடியாதாரமான மக்கள் பிரதிநிதித்துவத்தை தள்ளிப்போடுவது அரசாங்கத்தின் அரசியல் உறுதிப்பாட்டின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்ற விமர்சனத்தையும் ரில்வின் சில்வாவின் இறுக்கமான நிலைப்பாடு தோற்றுவித்துள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இதேவேளை, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விவகாரம் தொடர்பில் உத்தியோகபூர்வ விளக்கங்களை அளிக்கும்போது அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்பையும் சட்ட ரீதியான கடப்பாடுகளையும் நியாயப்படுத்த முனைகிறார்.
தொழில்நுட்பக் காரணங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் தேர்தல் சட்ட மூலங்களில் காணப்பட வேண்டிய திருத்தங்கள் போன்ற காரணிகளை அடிப்படையாக வைத்தே தேர்தல் தாமதங்கள் ஏற்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வருகிறார்.
அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு பயப்படவில்லை என்றும், முறையான மற்றும் நீதியான தேர்தலுக்கான ஆரம்பக் கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும் உரிய நேரத்தில் மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் என்றும் அவர் உறுதியளிக்கிறார்.
அத்துடன், அவர் மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி இன்னமும் அவ்வாறே உள்ளதாகவும் தனது கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் வெளியிட்ட கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டதொரு கருத்தைக் கூறுகின்றார்.
ஆயினும், இந்த விளக்கங்கள் வெறும் அரசியல் கால இழுத்தடிப்புகளே தவிர, அதிகாரப் பரவலாக்கல் மற்றும் உள்ளுர் நிர்வாகத்தை பலப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு உண்மையான அக்கறை இல்லை என்ற எதிர்க்கட்சிகளின் வாதத்திற்கு வலுச் சேர்ப்பதாகவே அமைந்துள்ளன.
அரசாங்கத்தின் இத்தகைய தடுமாற்றங்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயன்று வருகின்றன. அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான அழுத்தங்களையும் அரசியல் சவால்களையும் விடுத்து வரும் எதிர்க்கட்சிக் கூட்டணி, மாகாண சபை முறையை முடக்கி வைப்பது அரசியலமைப்பினை மீறும் செயல் என்று வாதிடுகிறது.
தாம் ஆட்சிக்கு வந்தால், அல்லது தமக்கான அரசியல் பலம் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடாத்தி, மாகாணங்களின் சுயாதீன நிர்வாகத்தை உறுதிப்படுத்துவோம் என்ற பிரதான வாக்குறுதியை அவை மக்கள் முன் வைத்துள்ளன.
குறிப்பாக, நாட்டின் எதிரணியில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து வழங்கியுள்ள கூட்டு வாக்குறுதி இந்நாட்டின் அரசியல் திசையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஒட்டுமொத்த அரசியல் அழுத்தங்களின் உச்சக்கட்டமாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதம் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற நிதிக்குழுவுக்கு அனுப்பியுள்ள இக்கடிதத்தில், குறிப்பாக சிறுபான்மை மற்றும் மலையக மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதில் மாகாண சபை முறையின் அவசியம் மிகத் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் என்பது வெறும் நிர்வாகக் கட்டமைப்பு மட்டுமல்ல, அது பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கான மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கான ஒரு முக்கிய அரசியல் களம் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலை மேலும் தாமதிப்பது நாட்டின் நல்லிணக்கத்திற்கும், சிறுபான்மையினரின் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்திற்கும் இழைக்கப்படும் அநீதி என்று அக்கடிதத்தின் மூலம் மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.
அதுமட்டுமன்றி மாகாண சபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் ரில்வினின் கருத்துக்களை ஆராய்ந்து பார்க்குமாறும் நிதிக்குழுவிடத்தில் கோரியுள்ளார்.
அந்த வகையில் மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் நிலவும் இந்த இழுபறியானது, இலங்கையின் ஒட்டுமொத்த அதிகாரப் பரவலாக்கல் கோட்பாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
அரசாங்கத் தரப்பில் முன்வைக்கப்படும் நிதி நெருக்கடி மற்றும் எல்லை மறுநிர்ணயக் காரணிகள் ஓரளவு யதார்த்தமானவை என்றாலும், மாகாண சபை முறைமையின் மீதான தற்போதைய ஆட்சியாளர்களின் தத்துவார்த்த ரீதியான அணுகுமுறையும் இங்கு உற்றுநோக்கத்தக்கது.
குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி முன்னிறுத்தும் 'மக்கள் பேரவைகள்' மற்றும் அடிமட்ட அதிகாரப்பகிர்வு போன்ற புதிய எண்ணக்கருக்கள், தற்போதுள்ள மாகாண சபை முறைமைக்கு மாற்றாக அமையுமா அல்லது அதனைப் பலவீனப்படுத்துமா என்ற சந்தேகம் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, புதிய அரசியல் சாசன மாற்றங்கள் அல்லது நிர்வாக மறுசீரமைப்புகள் என்ற பெயரில் தேர்தலைத் தள்ளிப்போடுவது, இச்சமூகங்களின் அரசியல் பாதுகாப்பின்மையைக் கூட்டுவதாகவே அமையும். 43 அரசியல் கட்சிகளின் வெளிப்படுத்தலின்படி 25 சதவீத பெண்கள், இளைஞர்கள் ஒதுக்கீட்டை அவர்கள் சட்டமில்லாதபோதும் வழங்கத் தயாராக இருக்கின்ற நிலையில் பழைய முறையில் உடனடியாக தேர்தலை நடத்துவதில் அரசாங்கத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தனிநபர் பிரேரணையை முன்வைத்துள்ளார்.
இந்த பிரேரணையானது ஏற்கனவே சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தின் அவதானிப்புக்களும் இணைக்கப்பட்டது தான். அதனை சட்டமா அதிபர் திணைக்களமும் தனது அவதானிப்பில் மிகத்தெளிவாகவே கூறியுள்ளது.
ஆகவே தற்போது மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு தேவையாக இருப்பது 'அரசியல் இயலுமை' மட்டும் தான்.





