பெலவத்தையிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்படும் போது ஹரிணி நிச்சயம் பதவி விலகுவார்; ஐக்கிய மக்கள் சக்தி
பெலவத்தையிலுள்ளவர்களுக்கு நீதி அமைச்சரவை விட அதிக அதிகாரம் காணப்படுகிறது. எனவே நீதி அமைச்சரால் சட்டமா அதிபரை பாதுகாக்க முடியாது.
எதிர்க்கட்சி மற்றும் மக்களின் நிலைப்பாட்டுக்கு அப்பால் பெலவத்தையிலிருந்து ரில்வின் சில்வா கூறும் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய நிச்சயம் பதவி விலக வேண்டியேற்படும். பெலவத்தையின் கட்டளைகளுக்கமைய அமைச்சரவை செயற்படாவிட்டால் அமைச்சுக்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிக்கும். இதனால் ஏற்பட்டுள்ள உள்ளகக் குமுறல்கள் விரைவில் வெளிப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் 24-01-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். எதிர்க்கட்சியின் தேவைக்கேற்ப தன்னால் பதவி விலக முடியாது என்றும் , மக்கள் கூறும் போது தான் பதவி விலகுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மை யாதெனில் எதிர்க்கட்சி மற்றும் மக்களின் நிலைப்பாட்டுக்கு அப்பால் பெலவத்தையிலிருந்து டில்வின் கூறும் போது அவர் நிச்சயம் பதவி விலக வேண்டியேற்படும்.
நாம் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தாலும் அதனை எம்மால் நிறைவேற்ற முடியாது என்பது தெரியும். எவ்வாறிருப்பினும் பிரதமர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை முற்றாக இழக்கப்பட்டுள்ளது. ஹரிணியைப் போன்றவர்கள் எதிர்க்கட்சியிலிருக்கும் வரை அது எமக்கு இலாபமாகும். வெகு விரைவில் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அனுப்புவதற்கு எமக்கான வாய்ப்புக்களை இவர்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இவர்கள் முன்மொழிந்துள்ள கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் விவாதிப்பதற்காகவே நாம் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளோம்.
இந்த அரசாங்கம் சர்வாதிகார பயணம் செல்லவே முற்படுகிறது. அதன் உச்சகட்டமாக சட்டமா அதிபரை பதவி விலக்குவதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால் நீதி அமைச்சர் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை எனக் கூறுகின்றார். ஹர்ஷண நாணயக்கார இந்த அரசாங்கத்தில் எறும்பைப் போன்றவர். அவருக்கு சட்டமா அதி;பரை பதவி நீக்கும் வகையிலான அதிகாரம் கிடையாது. இந்த அரசாங்கம் அமைச்சரவையால் நிர்வகிக்கப்படவில்லை. பெலவத்தையிலிருந்து தான் அரசாங்கம் நிர்வகிக்கப்படுகிறது.
பெலவத்தையிலுள்ளவர்களுக்கு நீதி அமைச்சரவை விட அதிக அதிகாரம் காணப்படுகிறது. எனவே நீதி அமைச்சரால் சட்டமா அதிபரை பாதுகாக்க முடியாது. அவ்வாறு சட்டமா அதிபரை பாதுகாக்கும் வகையில் அவர் கருத்துக்களை வெளியிட்டாலும், பின்னர் அதற்கான விளைவுகளை அனுபவிக்க நேரிடும். மறுபுறம் கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனமும் இழுபறியிலுள்ளது. ராஜபக்ஷ அரசாங்கம் கூட தனக்கு தேவையானவர்களை கணக்காய்வாளராக நியமிப்பதற்கு முயற்சிக்கவில்லை.
பெலவத்தையின் கட்டளைகளுக்கமைய அமைச்சரவை செயற்படாவிட்டால் அமைச்சுக்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிக்கும். அந்த வகையில் ஹரிணியை பதவி நீக்க வேண்டிய தேவை பெலவத்தை அலுவலகத்துக்கு உண்டு. இதனால் ஏற்பட்டுள்ள உள்ளகக் குமுறல்கள் விரைவில் வெளிப்படும் என்றார்.





