'பயங்கரவாதம்' என்பதற்கு தெளிவான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை: சரத் வீரசேகர
ண்டனை சட்டக்கோவைக்குள் உள்ளடக்கப்படாத விடயங்களே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும். அதனையே நாங்கள் எதிர்பார்த்தோம்.
பயங்கரவாதத்தில் இருந்து இராச்சியத்தை பாதுகாக்கும் சட்டவரைவில் 'பயங்கரவாதம்' என்பதற்கு தெளிவான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. இதனால் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக அம்சங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் 22-12-2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாதத்தில் இருந்து இராச்சியத்தை பாதுகாக்கும் சட்டவரைவு வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் அபிலாசைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளமைக்கு நீதியமைச்சுக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சட்டவரைவில் பயங்கரவாதம் என்றால் என்பதற்கு தெளிவான வரைவிலக்கணம் குறிப்பிடப்படவில்லை. பயங்கரவாதத்துக்கு தெளிவான வரைவிலக்கணம் குறிப்பிடப்படவில்லையாயின் 'பயங்கரவாதிகள்' என்பது யார் என்ற கேள்வி எழும்.அதேபோல் பயங்கரவாதம் என்பதற்கு தெளிவற்ற விளக்கமே வழங்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் அமைப்பின் தமிழ் பூர்வீக நிலத்துக்காகவே போரிட்டார்கள். அதேபோல் உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் இஸ்லாமிய இராச்சியத்துக்காகவே நடத்தப்பட்டது.யுத்தம் மற்றும் வேறு எதனுடனும் தொடர்புப்படாத சிவில் பிரஜைகளை படுகொலை செய்வது பயங்கரவாதமாக கருதப்படும்.
பயங்கரவாதத்துக்கு இந்த சட்ட வரைவு ஊடாக தெளிவற்ற விளக்கமளிக்கப்படுமாயின் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள், ஜனநாயக அம்சங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், பணிப்புறக்கணிப்புக்கள் மக்களை அச்சமூட்டும் செயற்பாடுகளாக கருதி அவை பயங்கரவாதத்துக்குள் உள்வாங்கப்படும்.
அதேபோல் மனிதபடுகொலை, சித்திரவதைக்கு உள்ளாக்குதல், பிணைக்கைதிகளாக வைத்துக்கொள்ளல், சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை தம்வசம் வைத்திருத்தல் ஆகிய சகல குற்றங்களும் சாதாரண தண்டனைச் சட்டக்கோவைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தண்டனை சட்டக்கோவைக்குள் உள்ளடக்கப்படாத விடயங்களே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும். அதனையே நாங்கள் எதிர்பார்த்தோம். இருப்பினும் அந்த நோக்கம் நிறைவேறவில்லை.
அதேபோல் அரசாங்கத்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அழுத்தம் பிரயோகிப்பது குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது.அரசாங்கம் மற்றும் அரசு என்பது வௌ;வேறானது.அரசாங்கத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.அவர்கள் சிவில் மக்களை படுகொலை செய்யமாட்டார்கள்.
பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.சிவில் பிரஜைகளையும் படுகொலை செய்வார்கள்.அரசாங்கம் மற்றும் அரசு தொடர்பில் இந்த சட்ட வரைவில் போதுமான விளக்கம் வழங்கப்படவில்லை. பயங்கரவாதத்தில் இருந்து இராச்சியத்தை பாதுகாக்கும் சட்டவரைவின் கோட்பாடு தெளிவாக குறிப்பிடப்படவில்லை.இது பிரதான பிரச்சினையாகும்.ஆகவே இந்த சட்டவரைவு தொடர்பில் அரசாங்கம் வெளிப்படையாக செயற்பட வேண்டும்.





