400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் சீன விமானம் வருகை
மனிதாபிமான நிவாரணப்பொருட்களில் வெள்ளத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவக்கூடிய உயிர்காக்கும் ஜக்கெட்கள், கூடாரங்கள், போர்வைகள், மெத்தை விரிப்புக்கள் என்பன உள்ளடங்குகின்றன.
பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த 84 தொன் மனிதாபிமான உதவி நிவாரணப்பொருட்களை ஏற்றிய சீன விமானம் 08-12-2025 அன்று நாட்டை வந்தடைந்தது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் சீனா அரசாங்கம் ஏற்கனவே ஒரு மில்லியன் டொலர் நிதியுதவியையும், 10 மில்லியன் ஆர்.எம்.பி பெறுமதியான நிவாரணப்பொருட்களையும் வழங்கியுள்ளது.
அதுமாத்திரமன்றி சீன செஞ்சிலுவை சங்கத்தினால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு 100,000 டொலர் உடனடி நிதியுதவியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் மேலும் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த 84 தொன்களுக்கு மேற்பட்ட மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் ஷங்காய் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 747 கார்கோ விமானம் நேற்று திங்கட்கிழமை (8) காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தது.
மேற்படி மனிதாபிமான நிவாரணப்பொருட்களில் வெள்ளத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவக்கூடிய உயிர்காக்கும் ஜக்கெட்கள், கூடாரங்கள், போர்வைகள், மெத்தை விரிப்புக்கள் என்பன உள்ளடங்குகின்றன.
நாட்டை வந்தடைந்த இவ்விமானத்தை வரவேற்பதற்கு துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக, பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





