மகாநாயக்க தேரர்களையும் ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி: ஐக்கிய மக்கள் சக்தி
உண்மையான குற்றவாளிகளையும் திருடர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த சுதந்திரமான நீதித்துறை அவசியமாகும்.
மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மதத் தலைவர்களையும் ஏமாற்றி, அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நாட்டின் நீதித்துறையைத் தனது கட்சித் தலைமையகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா குற்றஞ்சுமத்தினார்.
கொழும்பில் 13-08-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதம் தமக்கு கிடைக்கவில்லை எனக் கூறி அரசாங்கம் அவர்களை ஏமாற்றப் பார்க்கிறது. நாட்டின் கலாச்சாரத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் எந்தவொரு ஆட்சியாளரும் நீதித்துறையின் சுதந்திரத்தில் கைவைக்க மாட்டார்கள். இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தங்களின் ஆதரவாளர்களைத் தவிர, உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகள், சட்டத்தரணிகள் சங்கம், நீதிபதிகள் சங்கம் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
தேர்தல்களை நடத்தாமல், சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதே அரசாங்கத்தின் உண்மையான நோக்கமாகும். திருடர்களைப் பிடிப்பதாகக் கூறிக்கொண்டு தங்களுக்கு எதிரான அரசியல் குரல்களை மௌனமாக்கவும், நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டைத் தனது கட்சியின் தலைமையகத்திற்கு மாற்றவுமே அரசாங்கம் இந்தத் திருத்தத்தைக் கொண்டுவருகிறது. உண்மையான குற்றவாளிகளையும் திருடர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த சுதந்திரமான நீதித்துறை அவசியமாகும்.
இலங்கை என்பது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தனிப்பட்ட நாடு அல்ல் இது அனைத்து மக்களுக்குமான ஜனநாயக சோசலிசக் குடியரசாகும். 88-89 காலப்பகுதியைப் போன்று மீண்டும் நாட்டைச் சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்ல முற்பட வேண்டாம் என எச்சரிக்கிறோம். அத்துடன், ஆளுங்கட்சியினருக்கு ஒரு சட்டமும் ஏனைய மக்களுக்கு ஒரு சட்டமும் எனச் செயல்படுவதை நிறுத்திவிட்டு, நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு உண்மையான தீர்வுகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றார்.





