பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகித்தாரா? ஆளுந்தரப்பு எம்.பி. கிட்ணன் செல்வராஜா
தொலைபேசியில் அழைத்து, மரம் வெட்டியமை தொடர்பில் தான் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்ய வேண்டாம் என்றும் குறிப்பிடுகின்றார்.
தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா மரம் வெட்டிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்ய வேண்டாம் என பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளதாகக் குறிப்பிட்டு தொலைபேசி உரையாடல் குரல் பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி உரையாடல் குரல் பதிவு எந்த பொலிஸ் நிலையத்துக்கு பேசப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை. எனினும் அதில் நபரொருவர் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜாவை (எனக்குறிப்பிடப்பட்டுள்ள) தொலைபேசியில் அழைத்து, மரம் வெட்டியமை தொடர்பில் தான் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்ய வேண்டாம் என்றும் குறிப்பிடுகின்றார்.
பின்னர் அவரது தொலைபேசியில் பொலிஸ் உத்தியோகத்தரிடம் பேசிய அவர், முறைப்பாட்டை பதிவு செய்யாது தண்டப்பணத்தை அறவிட்டு உதவுமாறு கோருகின்றார். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் பேசி தன்னால் முடிந்த உதவியை செய்வதாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அந்த குரல் பதிவில் குறிப்பிடுகின்றார். ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை தொடர்புபடுத்தி இவ்வாறான தொலைபேசி உரையாடல் குரல் பதிவு வெளியாகியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





