பெக்கோ சமனின் மனைவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
சந்தேகநபரின் பேரில் டுபாயில் 4 வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் கணக்கு இலக்கங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயலில் ஈடுபடும் குற்றவாளியான பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானியை பண சுத்திகரிப்பு குற்றத்தின் பேரில் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று (9) கொழும்பு நீதவான் அசங்க எஸ். போதரகம தலைமையில விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
போதைப்பொருள் சட்டத்தின் 54 ஆம் உப பிரிவு மற்றும் பண சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்துக்கமைய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டமை மற்றும் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பண சுத்திகரிப்பு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானிக்கு கைதுசெய்யப்பட்டார். ஷாதிகா லக்ஷானிக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்துக்கான உரிய சான்றுகள் இல்லை எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி வழக்கு விசாரணை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் நேற்று சிறைச்சாலை அதிகாரிகளால் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது பண சுத்திகரிப்பு மோசடிக்காக சந்தேகநபர் உட்பட அவருடன் நெருங்கி உறவினர்களின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 13 வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தது. அவ்வாறு முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் சுமார் 5 கணக்குகள் சந்தேகநபருக்கு சொந்தமானது எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சார்பாக மன்றில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் தெரிவித்திருந்தார்.
மேலும் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஷாதிகா லக்ஷானியின் சகோதரியான லக்ஷானி தேஷாஞ்சலிக்கு சொந்தமான இரு வங்கி கணக்குகளில் 2024 ஆம் ஆண்டு 563 இலட்சம் ரூபாவும் 2025 ஆம் ஆண்டு 202 இலட்சம் ரூபாவும் புலங்கப்பட்டமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அதேபோல் சந்தேகநபரின் தந்தையான பத்தினிகே சுனில் சாந்த என்பவரது வங்கி கணக்கில் 211 இலட்சம் ரூபா பணம் புலங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது,
செங்கல் தயாரிக்கும் தொழிலாளியின் வங்கி கணக்கில் இத்தகையதொரு பாரிய தொகை பணம் புலங்கியிருப்பது சந்தேகத்தை தூண்டும் வகையில் உள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து கிடைத்தப் பணம் இவ்வாறு வங்கி கணக்குகளில் புலங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் சந்தேகநபர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை உறுதி செய்யும் வகையில் ஏற்கனவே 3 வாக்கு மூலங்கள் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சமீபத்தில் எம்பிலிபிட்டிய பகுதியில் 38 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களிடம் வாக்கு மூலம் பெறுவதற்கு அனுமதியளிக்குமாறும் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார். சந்தேகநபரின் பேரில் டுபாயில் 4 வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் கணக்கு இலக்கங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இதன்போது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது ஆதரவாளர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள போதும் அதை உறுதிப்படுத்தும் வகையில் இதுவரை போதியளவான சாட்சியங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆகையால் அவரை விடுவிக்குமாறு மன்றில் தெரிவித்திருந்தார். முன்வைக்கப்பட்ட இருதரப்பு சாட்சியங்களையும் பரிசீலனை செய்த நீதவான் பண சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணைகளுக்காக சந்தேகநபரை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.





