நிர்மலா சீதாராமனுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சந்திப்பு
2022இல் ஏற்பட்ட நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய 4 பில்லியன் டொலர் ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
நவீன வர்த்தக யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு இந்திய - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின் மாதிரியைப் பின்பற்றி புத்தாக்கம், அரச - தனியார் கூட்டு முயற்சியாண்மைகள், ஆராய்ச்சி மற்றும் வணிகத் துறைகளுடன் பொருளாதாரக் கொள்கைகளை இணைப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
டில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, 04-11-2025 அன்று இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சந்திப்பில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றை ஆழப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் இயற்கை அருட்கொடைகள் மற்றும் மனித திறைமைகள் தொடர்பில் பாராட்டியுள்ள இந்திய நிதி அமைச்சர், இந்தியாவின் மாறிவரும் பொருளாதாரத்துடன் நெருக்கமாக ஈடுபடுவதன் மூலம் இந்த பலங்களைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தும் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவ்வாறே, இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் இலங்கையின் தொழிற்துறையை வேகமாக முன்னேற்றம் காணச் செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், வலுவான உள்நாட்டு தொழிற்துறைகள் மூலம் இலங்கையின் பொருளாதார இறையாண்மையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2022இல் ஏற்பட்ட நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய 4 பில்லியன் டொலர் ஒத்துழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நன்றிகளைத் தெரிவித்துள்ளார். ஒரு தனி நாடாக இலங்கைக்கு வழங்கிய மிகப்பெரிய நிதி மானியம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்துறை கொள்கை மற்றும் டிஜிட்டல் ஆளுகை தொடர்பில் இந்தியாவின் சாதனைகளை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர், ஒப்பீட்டு ரீதியாக நிலைத்தன்மை காணப்பட்ட போதிலும், இலங்கை இன்னும் வெளிநாட்டு கையிருப்புக்களை கட்டியெழுப்புதல், ஏற்றுமதிகளை பன்முகப்படுத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிப்படையான மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான ஒத்துழைப்பின் அவசியப்பாடு தொடர்பில் இருவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். கூட்டு முயற்சியாண்மைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கு இந்தியா-இலங்கை தொழிநுட்பம் சார் கைத்தொழில் வலயத்தை உருவாக்கும் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது முன்வைத்துள்ளார்.
நவீன வர்த்தக யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்வதற்கும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் மாதிரியைப் பின்பற்றி புத்தாக்கம், அரச - தனியார் கூட்டு முயற்சியாண்மைகள், ஆராய்ச்சி மற்றும் வணிகத் துறைகளுடன் பொருளாதாரக் கொள்கைகளை இணைப்பதன் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
பரஸ்பர மரியாதை மற்றும் நீண்டகால கூட்டாண்மையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்தியாவுடனான நெருக்கமான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்திக் கொள்ள தமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்போடுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.





