ஆயுதப்படை நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு
பொப்பி மலர் நினைவேந்தல் நிகழ்வானது இலங்கை ஆயுதப்படையின் மூத்த வீரர்களின் சங்கமும் ஆயுதப் படைத் தரப்பினரும் இணைந்து ஒழுங்குச் செய்யப்பட்டது.
ஆயுதப்படைகளின் நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நிறுவப்பட்டிருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர்த்தியாகம் செய்த இராணுவ உறுப்பினர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னத்தின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நினைவுச் சின்னம் கொழும்பில் செனோடாப் போர் நினைவிடம் என அழைக்கப்படுகிறது. இது அப்போதைய இலங்கை இராணுவ அதிகாரிகள் இரு உலகப் போர்களிலும் (முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்) உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் நிறுவப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும்.
இது, சர் எட்வின் லேன்ட்ஸீர் லூட்டென்ஸ் என்ற கட்டிடக் கலைஞரின் வடிவமைப்பாகும். இந்த நினைவுச் சின்னம் இலங்கையின் பழமையான மற்றும் பிரதானமான போர் நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். இங்கு வருடாந்த நினைவு தினத்தில் (நவம்பர் 11ஆம் திகதியை அண்மித்த ஞாயிற்றுக்கிழமை) தேசிய நினைவேந்தல் விழா நடத்தப்படுகிறது.
இதன்போது, பிரதமர் அவர்கள் நினைவுச் சின்னத்தில் பொப்பி மலர்க் கொத்தை வைத்து, உயிர்த்தியாகம் செய்த இராணுவ உறுப்பினர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தினார்.
முதலாம் உலகப் போர் காலம் முதல் இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் நீத்த ஆயுதப்படை உறுப்பினர்களை நினைவுகூருவதும் அவர்களின் உன்னதமான தியாகத்திற்குக் மரியாதைச் செலுத்துவதுமே இந்த வருடாந்த நினைவேந்தலின் பிரதான நோக்கமாகும்.
முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த ஆயுதப்படை உறுப்பினர்களை நினைவுகூருவதற்காகப் போப்பி மலர் தினம் மகாபிரித்தானியாவால் 1919ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டுவருகிறது. இதில் பொப்பி மலர் பிரதான சின்னமாக இருந்து வருகிறது.
பெல்ஜியப் போர்க்களத்தில், நண்பரின் மரணத்தால் துயருற்ற லெப்டினன்ட் கேர்ணல் ஜோன் மக்ரே கல்லறைகளின் மீது வளர்ந்திருந்த பொப்பி மலர்களைப் பார்த்துக் கவிதை வடிக்கலானார். கவிதையே இந்த மலரை நிரந்தர நினைவுச்சின்னமாக அமைய முதன்மைக் காரணியாக அமைந்தது.
பிற்காலத்தில், அமெரிக்க இளைஞர் சங்கத்தின் செயலாளராக இருந்த திருமதி மொய்னா மைக்கல் அவர்கள், பொப்பி மலர்களை விற்றுப் பெற்ற பணத்தை, இறந்த இராணுவ உறுப்பினர்களின் குடும்பங்களின் நலன்புரிக்காகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த பொப்பி மலரின் முக்கியத்துவம் உலகளவில் உறுதிப்படுத்தப்பட்டது.
பொப்பி மலர் நினைவேந்தல் நிகழ்வானது இலங்கை ஆயுதப்படையின் மூத்த வீரர்களின் சங்கமும் ஆயுதப் படைத் தரப்பினரும் இணைந்து ஒழுங்குச் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜெயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொன்தா, முப்படைத் தளபதிகள், ஓய்வுபெற்ற முப்படைத் தளபதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இலங்கை ஆயுதப் படைகள் சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பெருமளவு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.





