உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுங்கள்
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை மக்களுக்கும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது அடுத்த பிரதான காரணியாகும். விரைவில் அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பில், கத்தோலிக்க திருச்சபை 3 பிரதான காரணிகளை வலியுறுத்தியுள்ளது. அதற்கமைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை விரைவில் மக்கள் மயப்படுத்தப்படும் என்றும், அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் 22-11-2025 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கான நியாயத்தைப் பெற்றுக் கொள்வதற்கான குழுவின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளுக்கிடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. ஜனாதிபதியிடம் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த கோரிக்கைக்கமையவே அந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
நீதி அமைச்சர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், மத விவகார அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் உட்பட விசாரணைகளுடன் தொடர்புடைய உயர்மட்டத்தினரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். இதன் போது 3 பிரதான விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள், வழக்குகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் உள்ளிட்டவை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பது முதன்மை காரணியாக அமைந்திருந்தது.
அதற்கமைய ஓரிரு வாரங்களுக்குள் இதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கு விரைவில் குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. எனவே விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இந்த அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையாவது நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றோம்.
இரண்டாவது காரணி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதாகும். அது மாத்திரமின்றி அந்த அறிக்கை மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றோம். குறிப்பிடவொரு காலப்பகுதிக்குள் விசாரணைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தமையால், வெளிநாடுகளிலுள்ளவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. எனவே அந்த அறிக்கையை முறையாக மதிப்பாய்வு செய்து குற்றப்புலனாய்வுப் பிரிவு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை மக்களுக்கும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது அடுத்த பிரதான காரணியாகும். விரைவில் அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இம்மூன்று காரணிகள் தொடர்பில் நாம் ஓரளவுக்கு வெற்றிகரமான பதில்களைப் பெற்றுள்ளோம். மேலும் சிங்கள மற்றும் தமிழ் அடிப்படைவாத குழுக்கள் சில தடை செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் சில முஸ்லிம் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன.
எவ்வாறிருப்பினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் சில அமைப்புக்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இது மிகவும் பாரதூரமான விடயமாகும். தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் மத மற்றும் இன அடிப்படைவாத குழுக்கள் நேரடியாகத் தாக்கம் செலுத்துகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளடங்களாக மேலும் பல சந்தர்ப்பங்களில் இவை அடிப்படை காரணிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன. இந்த அடிப்படைவாத குழுக்கள் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகும். நாட்டில் மீண்டும் இதுபோன்றதொரு சமூகக் கொலை இடம்பெற இடமளிக்க முடியாது. அடிப்படைவாதங்களால் நாட்டை பலவீனப்படுத்த மீண்டுமொருமுறை இடமளித்து விடக் கூடாது என்றார்.





