பதவி உயர்வில் சிரேஷ்ட நீதிபதிகள் புறக்கணிப்பு: தயாசிறி எம்.பி.
நீதிபதிகளின் பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பிலான முறைமையை நாங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நீதிபதிகளுக்கான பதவி உயர்வின் போது சிரேஷ்ட நீதிபதிகள் புறக்கணிக்கப்பட்டார்கள்.இந்த முறையற்ற செயற்பாட்டுக்கு நீதி கோரியே பாராளுமன்ற செயற்குழு ஒன்று நியமிக்குமாறு கோரினோம். சிரேஷ்ட நீதிபதிகள் இவ்வாறு புறக்கணிக்கப்படும் போது கீழ் நிலை நீதிமன்ற நீதிபதிகள் ' அரசாங்கத்துக்கு விருப்பமான வகையில் தீர்ப்பளிக்க வேண்டும் அப்போது தான் பதவி உயர்வு கிடைக்கும்' என்று கருதுவார்கள்.1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நீதிமன்றங்களுக்கு தீ வைத்து, நீதிமன்ற ஆவணங்களை அழித்தவர்கள் இன்று நீதித்துறை சுதந்திரம், சுயாதீனம் பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 09-01-2026அன்று நடைபெற்ற கடை,அலுவலக ஊழியர் ( ஊழியத்தையும், வேதனத்தையும்,ஒழுங்குப்படுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நீதிபதிகளின் நியமனம், பதவி உயர்வு மற்றும் பதவி நீக்கம் தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு நாங்கள் விடுத்த யோசனை தொடர்பில் சபாநாயகரால் விடுக்கப்பட்ட அறிவிப்பு முற்றிலும் தவறானது.
நீதிபதிகளின் பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பிலான முறைமையை நாங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தின் ஊடாகவே நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆணைக்குழு ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். ஆகவே நீதிச்சேவை ஆணைக்குழு என்பது நீதிமன்றமல்ல, அது நிர்வாக கட்டமைப்பின் ஒரு பகுதி மாத்திரமே,
நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றியே நாங்கள் கேள்வியெழுப்பினோம். சபாநாயகர் இன்று விடுத்த அறிவிப்பு தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துடனோ அல்லது பாராளுமன்ற செயலாளர் அலுவுலகத்தின் அதிகாரிகளிடமோ கலந்துரையாடினாரா, இல்லை என்றே குறிப்பிட வேண்டும்.
நீதிபதிகளுக்கான பதவி உயர்வின் போது சிரேஷ்ட நீதிபதிகள் புறக்கணிக்கப்பட்டார்கள்.இந்த முறையற்ற செயற்பாட்டுக்கு நீதி கோரியே பாராளுமன்ற செயற்குழு ஒன்று நியமிக்குமாறு கோரினோம். சிரேஷ்ட நீதிபதிகள் இவ்வாறு புறக்கணிக்கப்படும் போது கீழ் நிலை நீதிமன்ற நீதிபதிகள் ' அரசாங்கத்துக்கு விருப்பமான வகையில் தீர்ப்பளிக்க வேண்டும் அப்போது தான் பதவி உயர்வு கிடைக்கும்' என்று கருதுவார்கள். அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்.
நீதிச்சேவை சங்கத்தின் கூட்டத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அண்மையில் கலந்துக் கொண்டு ' ஆணைக்குழுவால் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றங்களுக்கு கிடையாது. அவர்களை சிறைக்கு அனுப்புங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.இது முற்றிலும் தவறானது.
நீதித்துறையின் சுயாதீனத்துக்கு எதிராக நாங்கள் செயற்படவில்லை. பாதிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கே நீதி கோரினோம். 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நீதிமன்றங்களுக்கு தீ வைத்து, நீதிமன்ற ஆவணங்களை அழித்தவர்கள் இன்று நீதித்துறை சுதந்திரம்,சுயாதீனம் பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது என்றார்.





