மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் வேண்டுமென்றே தாமதப்படுத்தவில்லை: அமைச்சர் சந்தன
மாகாணசபைகள் தேர்தல்கள் குறித்து உயர்ஸ்த்தானிகர் இச்சந்திப்பின் போது அமைச்சரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் வேண்டுமென்றே தாமதப்படுத்தவில்லை.சில சட்ட,தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாகவே தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.அது குறித்து எதிர்காலத்தில் விரைவான தீர்மானங்கள் எடுக்கப்படும் என பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன, கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்ட்டினிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்ட்டினிற்கும், பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு 16-02-2026அன்று அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல்,பொருளாதாரம் மற்றும் சமூக உறவு மேம்பாடு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மாகாணசபைகள் தேர்தல்கள் குறித்து உயர்ஸ்த்தானிகர் இச்சந்திப்பின் போது அமைச்சரிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் சந்தன அபேரத்ன 'மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் வேண்டுமென்றே தாமதப்படுத்தவில்லை.சில சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாகவே மாகாணசபைகள் தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக' குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அது குறித்து எதிர்காலத்தில் விரைவாக தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கனடாவின் 'இந்து –பசுபிக் மூலோபாயம்' மற்றும் அதில் இலங்கையில் வகிபாகம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த மூலோபாயத் திட்டத்தின் கீழ் இதுவரையில் பசுபிக் பிராந்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட போதிலும்,இந்த ஆண்டு முதல் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப ஒத்துழைப்பின் கீழ் புத்தளம், மன்னார் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், முதற்கட்ட ஆய்வின் பின்னர் உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் கனேடியப் பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதுடன்,பிராந்திய ரீதியாக இலங்கை இந்தியாவுடன் நெருக்கமாக செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.





