நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு சர்வ ஜன வாக்கெடுப்பு அவசியமல்ல - நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார
ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த அரசியலமைப்புத் திருத்தத்துக்காக சர்வசன வாக்கெடுப்பிற்பு செல்ல வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் சர்வ ஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. கடந்த காலத்தில் அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்தின் மூலம் நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட போது சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்லவில்லை. எனவே தற்போதைய தீர்மானத்துக்கும் சர்வசன வாக்கெடுப்பினை நடத்த வேண்டிய தேவை ஏற்படாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 28-07-2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த அரசியலமைப்புத் திருத்தத்துக்காக சர்வசன வாக்கெடுப்பிற்பு செல்ல வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை. அரசியலமைப்பின் 83ஆவது சரத்தில் எந்தெந்தக் குறிப்பிட்ட சரத்துக்களைத் திருத்துவதற்கு மக்கள் தீர்ப்பு அவசியம் என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அரசாங்கம் தற்போது மேற்கொள்ளும் இந்த ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு மற்றும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்தங்கள் அந்த எந்தவொரு சரத்திலும் உள்ளடங்கவில்லை. முன்னதாக 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரித்த போதும் சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை.
நீதிமன்றங்களின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதிலும், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதிலும் சட்டத்தரணிகளுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் அக்கறை உள்ளது போலவே அரசாங்கத்திற்கும் பொறுப்பு உள்ளது. எனவே, இந்தத் திருத்தத்தை எவரேனும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தி, அதனைப் பரிசீலிக்கும் உயர்நீதிமன்றமானது இதற்கு சர்வசன வாக்கெடுப்பு அவசியம் என்றொரு தீர்ப்பை வழங்கினால் மட்டுமே அரசாங்கம் மக்கள் தீர்ப்பை நோக்கிய நடைமுறையை முன்னெடுக்க வேண்டிவரும்.
ஆனால் தற்போதைய சட்டச் சூழலின் படி உயர்நீதிமன்றம் அவ்வாறு தீர்ப்பளிக்கும் என்று நான் நினைக்கவில்லை. எந்தப் அடிப்படையில் உயர்நீதிமன்றம் அப்படிச் சொல்ல முடியும் என்பதை அவ்வாறானதொரு விவாதத்தை முன்வைத்துள்ள எதிர்க்கட்சிகளே கூற வேண்டும். நீதிமன்றங்களில் வழக்குகள் மாதக்கணக்கில், வருட கணக்கில் தாமதமாவதால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே நீதித்துறை அமைப்பும் ஏனைய துறைகளைப் போலவே திறமையாகச் செயல்பட வேண்டும்.
நீதிமன்றச் செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது என்பது ஒரு பக்கம் மட்டுமே. நாங்கள் இன்னும் பல அம்சங்களில் தலையிட்டு வருகிறோம். முக்கியமாக, அரசின் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் வழக்குகள் தாமதமாகும் 29 பிரச்சனைகளை விரைவாகத் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். அத்துடன் நீதி அமைச்சு மற்றும் நீதிமன்ற ஊழியர்களை நியமிக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. இலட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கும் ஒரு அமைப்பையே நாங்கள் விரைவுபடுத்த முயல்கிறோம்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு மில்லியன் மக்களுக்கு 60 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் உள்ளனர். ஆனால் இலங்கையில் ஒரு மில்லியன் மக்களுக்கு வெறும் 20 நீதிபதிகளே உள்ளனர். கடந்த 10-15 வருடங்களாக எதிர்காலத் தேவைகளைக் கணித்து நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும் நீதிபதிகளின் எண்ணிக்கையையும் உயர்த்தியிருக்க வேண்டும். அது செய்யப்படாததாலேயே இன்று வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. நாங்கள் ஓய்வுபெறும் வயதை மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திற்கு மட்டும் உயர்த்தவில்லை; நீதித்துறை அமைப்புச் சட்டத்தையும் திருத்தி மாநீதிபதிகளின் அனுபவமும் முதிர்ச்சியும் அதிகரிக்கும் போது, சட்டத்தின் நுட்பங்களை அறிந்து வழக்குகளை விரைவாகக் கையாளுவதற்கான திறன் அதிகரிக்கும். 1978 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஓய்வுபெறும் வயது திருத்தப்படவே இல்லை. பெரும்பாலான சர்வதேச நாடுகளில் ஓய்வுபெறும் வயது 70 ஆக உள்ளது. எனவே அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் சேவையை மேலும் சில ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்வதே இதன் நோக்கமாகும். எங்கள் நீதித்துறை முற்றிலும் சுயாதீனமானது என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். யாராவது தனிப்பட்ட விமர்சனங்களையோ சந்தேகங்களையோ எழுப்பினால் அதற்கு அவர்கள் தரப்பில் கருத்துச் சொல்ல உரிமையுள்ளது, ஆனால் அரசாங்கத்தின் அடிப்படை நோக்கம் நீதித்துறைச் செயல்பாட்டை விரைவுபடுத்துவதும் திறம்பட மாற்றுவதும் மட்டுமே ஆகும் என்றார்.





