மக்கள் சுதந்திரமாக புத்தாண்டு கொண்டாட மஹிந்தவே காரணம் - சஞ்ஜீவ எதிரிமான்ன
ஹிந்த ராஜபக்ஷ எனும் பெயருக்குள்ளேயே அவருக்குரிய அனைத்து கௌரவங்களும் அடங்கியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்துக் கொடுத்தார் என்றும், அதன் காரணமாகவே இன்று நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாகச் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 14-04-2026அன்று நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் அவரது பாதிரியார் சிரந்தி ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, மதுர விதானகே மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 1980களின் ஆரம்பம் முதல் 2009ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை சுமார் முப்பது வருட காலம் இலங்கையர்கள் மிகுந்த அச்ச உணர்வுடனேயே புத்தாண்டு காலங்களைக் கழித்தனர். யுத்த முன்னணியில் நின்ற முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த வீரர்களின் தாய்மார்கள், தமது பிள்ளைகளைப் பற்றிய கவலையில் நெஞ்சில் நெருப்பைச் சுமந்து கொண்டே புத்தாண்டு காலங்களில் அடுப்பு மூட்டிய ஒரு துரதிஷ்டவசமான வரலாறு நமக்கு இருந்தது.
நாட்டின் வடக்கே ஆரம்பித்து அக்குரஸ்ஸ கொடபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் வரை புலிகளினால் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்ட தேசமாகவே இலங்கை அன்று காணப்பட்டது. ஸ்ரீ மகா போதி முதல் தலாதா மாளிகை வரை குண்டுகள் வீசப்பட்ட அந்தப் பயங்கரமான யுகத்தை மாற்றி, அமைதியானதொரு தேசத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உருவாக்கினார். மடு தேவாலயத்தின் பீடத்தில் கூட குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த காலமது. அத்தகைய இக்கட்டான நிலையிலிருந்து இந்த நாட்டை மீட்டெடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷவே ஆவார்.
மஹிந்த ராஜபக்ஷ எனும் பெயருக்குள்ளேயே அவருக்குரிய அனைத்து கௌரவங்களும் அடங்கியுள்ளன. அவர் ஒரு முழுமையான கலாசார மனிதர். இந்த நாட்டில் அந்நிய ஆக்கிரமிப்புகள் நிலவிய காலத்தில் கூட, இங்குள்ள கலாசார பெறுமதிகள் குறித்து வெளிநாட்டு அதிகாரிகள் வியந்து போற்றி நூல்களை எழுதியுள்ளனர். இன்றைய நவீன உலகமயமாக்கல் சூழலில் டிஜிட்டல் தளங்கள் ஊடாக நாம் இணைந்திருந்தாலும், எமது பூர்வீக கலாசார வேர்களை நோக்கித் திரும்புவதே புத்தாண்டின் சிறப்பம்சமாகும்.
இந்த கலாசார விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது எமது பொறுப்பாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை மிகச்சரியாகச் செய்து வருகின்றார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று தனது பிள்ளைகளுக்கும் அந்தப் பாரம்பரியத்தைக் கற்றுக்கொடுப்பதை நாம் காண்கின்றோம். இவ்வாறான கலாசார அடையாளங்களை நாம் பாதுகாக்கும் வரை மட்டுமே எமது தேசத்தின் தனித்துவம் உலக அரங்கில் நிலைத்திருக்கும்.
அரசியல் ரீதியான நிலைப்பாடுகளுக்கு அப்பால், இன்று எமது பிள்ளைகள் எவ்வித அச்சமுமின்றி ஒரு சுதந்திர நாட்டில் வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய தலைமைத்துவமே காரணமாகும். இன்று 2026ஆம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டை மக்கள் அனைவரும் எவ்வித பேதமுமின்றி, நெஞ்சில் அச்சமின்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்கு அவர் அன்று பெற்றுக்கொடுத்த சுதந்திரமே அடித்தளமாகும் என்றார்.





