இலங்கையின் பாதுகாப்புத் தேவைகளில் இந்தியா நிலையான பங்காளியாக இருக்கும் - இந்திய உயர்ஸ்தானிகர்
தற்போதைய உலகளாவிய ரீதியிலான போர்ச் சூழல்கள் மற்றும் கொந்தளிப்பான காலப்பகுதியில், பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும்.
இலங்கையும் இந்தியாவும் ஒரே புவியியல் அமைப்பைப் பகிர்ந்து கொள்வதுடன், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் ஆழமான வரலாற்று நலன்களைக் கொண்டுள்ளன. இலங்கையின் பாதுகாப்புத் தேவைகளுக்கு இந்தியா எப்போதும் ஒரு நம்பிக்கைக்குரிய மற்றும் நிலையான பங்காளியாக இருக்கும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
கொழும்பில் 25-03-2026 அன்று நடைபெற்ற "இலங்கை இந்திய பாதுகாப்பு கருத்தரங்கில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் இதனை குறிப்பிட்டார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேலும் உரையாற்றுகையில் தற்போதைய உலகளாவிய ரீதியிலான போர்ச் சூழல்கள் மற்றும் கொந்தளிப்பான காலப்பகுதியில், பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயமும், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயங்களும் இரு நாட்டு உறவுகளுக்கு புதிய ஆற்றலை வழங்கியுள்ளன. குறிப்பாக, கையெழுத்திடப்பட்ட இந்திய இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் பல தசாப்தகால உறவை மேலும் முறைப்படுத்தியுள்ளது.
இலங்கையின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்த இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மானிய உதவிகளை வழங்கியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி கடந்த ஆண்டில் 2.76 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இதில் 50 சதவீத ஏற்றுமதி அமெரிக்காவுக்கு செய்யப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். 2030 ஆம் ஆண்டிற்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை 5.5 பில்லியன் டொலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏவுகணைகள், கவச வாகனங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
'தற்சார்பு பாரதம்' திட்டத்தின் கீழ், ட்ரோன் தயாரிப்பு மற்றும் கப்பல் கட்டும் துறையில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுத்து வருகிறது. தமிழ்நாட்டிலும் உத்தரப்பிரதேசத்திலும் பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அதிநவீன தொழில்நுட்பங்களை குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளவும், பிராந்திய விநியோகச் சங்கிலியுடன் இணைந்து செயல்படவும் இலங்கைக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்புத் தேவைகளுக்கு இந்தியா எப்போதும் ஒரு நம்பிக்கைக்குரிய மற்றும் நிலையான பங்காளியாக இருக்கும் என்றார்.





