கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் சென்றதை ஏற்றுக்கொள்ளவில்லை - ரிஷாத்
எதிர்க்கட்சியில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் விமர்சிக்க முடியாது.
உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துக் கொண்டதை கட்சி என்ற அடிப்படையில் எமது கட்சி விரும்பவில்லை.எதிர்க்கட்சித் தலைவரின் இவ்வாறான செயற்பாடுகள் அவருக்கும், கட்சிக்கும் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த உயரிய சபை ஊடாக குறிப்பிட்டுக்கொள்கிறேன். சானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது.அவர்கள் தமக்கான கடமையை சிறந்த முறையில் நிறைவேற்றுவார்கள். எதிர்க்கட்சியில் உள்ளதால் அனைத்தையும் நாங்கள் எதிர்க்க போவதில்லை. தேவையான சிறந்த விடயங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 09-04-2026 அன்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சவூதி அரேபியாவில் அமெரிக்க படைத்தளங்கள் இருப்பதாகவும், அவை வெளியேற்றப்பட வேண்டும் என்று நான் குறிப்பிட்டதாக பல ஊடகங்கள் புனையப்பட்ட வகையில் போலியான செய்தியை வெளியிட்டுள்ளன. நான் அவ்வாறு ஒன்றும் சொல்லவில்லை. ஆகவே அந்த செய்திகள் திருத்திக் கொள்ள வேண்டும்.
குண்டுத்தாக்குதல் பற்றிய விவாதத்தில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட பல விடயங்களுடன் நான் உடன்படுகிறேன்.உதய கம்மன்பிலவின் நூல் வெளியிட்டு நிகழ்வில் எதிரக்கட்சித் தலைவர், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கலந்துக் கொண்டதை கட்சி என்ற அடிப்படையில் எமது கட்சி விரும்பவில்லை.
எதிர்க்கட்சித் தலைவரின் இவ்வாறான செயற்பாடுகள் அவருக்கும், கட்சிக்கும் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த உயரிய சபை ஊடாக குறிப்பிட்டுக்கொள்கிறேன். சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் மீது எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்று சபை முதல்வர் குறிப்பிட்டார்.
சானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது.அவர்கள் தமக்கான கடமையை சிறந்த முறையில் நிறைவேற்றுவார்கள். எதிர்க்கட்சியில் உள்ளதால் அனைத்தையும் நாங்கள் எதிர்க்க போவதில்லை. தேவையான சிறந்த விடயங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தால் கத்தோலிக்க மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். அதேபோல் முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டார்கள். ஜே.வி.பி இந்த குண்டுத்தாக்குதல்களை நடத்தியது என்று காட்டுவதைப் போன்று ஒருசிலர் நூல் வெளியிடுகிறார்கள்.
இதுவரை காலமும் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புப்படுத்தி என்னையும், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, வைத்தியர் சாபி ஆகியோரை குற்றஞ்சாட்டியவர்கள் இன்று முஜிபூர் ரஹ்மான் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள். குண்டுத்தாக்குதல் தொடர்பில் மீண்டும் சதி செய்து ஆட்சியை பிடிக்க பார்க்கிறார்கள்.
குண்டுத்தாக்குதலுடன் ஆட்சிக்கு வந்தவர்கள் நிம்மதியாக நாட்டை ஆட்சி செய்தார்களா, நாடு நிம்மதியாக இருந்ததா, எந்த அரச தலைவருக்கும் நேராத துர்பாக்கிய நிலைமை கோட்டபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டது. மக்களால் விரட்டியடிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சியில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் விமர்சிக்க முடியாது. குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தார்மீக பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. பயங்கரவாதி சஹ்ரானை இயக்கியது யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். விசாரணைகள் தூய்மையான முறையில் இடம்பெற வேண்டும்.கோட்டபய ராஜபக்ஷ மிகவும் கீழ்த்தரமான முறையில் அன்று செயற்பட்டு எனது சகோதரர் உட்பட பலரை கைது செய்தார்.சதிகள் என்றும் வெற்றிப்பெறாது. உண்மை வெளிவரும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.





