சுரேஸ் சலேவை விடுவிக்கும் வரை சத்தியாகிரக போராட்டம் தொடரும்
இலங்கை தாய்மார்கள் எவரும் இனி தமது பிள்ளைகளை இராணுவத்துக்கு வழங்க கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஸ் சலேவை குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதானி சானி அபேசேகரவின் சித்திரவதை முகாமுக்கு அனுப்ப கூடாது. அவர் விடுவிக்கப்பட வேண்டும். தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் நோக்கம் வெற்றிப் பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சுரேஸ் சலேவை விடுவிக்கும் வரை சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பற்றி மாத்திரம் பேசப்படுகிறது. புலிகள் அமைப்பு எத்தனை ஆயிரம் பேரை படுகொலை செய்தது.அது பற்றி யாரும் ஏன் பேசவில்லை. நாட்டுக்காக போராடிய சுரேஸ் சலேவுக்காக தொடர்ந்து போராடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஸ் சலேவை விடுவிக்க கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர ஆகியோரின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக சத்தியாகிரக போராட்டம் 08-06-2026அன்று இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன, சர்வஜன சக்தி கட்சியின் உறுப்பினர் மதுர விதானகே, முன்னாள் அமைச்சர்களான டிரான் அழஸ், பிரசன்ன ரணதுங்க உட்பட, பௌத்த பிக்குள் கலந்துக் கொண்டனர். இதன்போது அவ்விடத்த்pல் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
காலை 10 மணியளவில் கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இந்த சத்தியாகிரக போராட்டம் ஆரம்பமாகுவதற்கு முன்னர் அவ்விடத்தில் பெண் ஒருவர் ' குண்டுத்தாக்குதலால் எமது குடும்பமே இல்லாமல் போனது. எமக்கும் நீதி வேண்டும்' என்று பதாதை ஏந்தி தனித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அந்த இடத்துக்கு வந்த விமல் வீரவன்சவின் தரப்பினர் அவருடன் முரண்பட்டு அந்த இடத்தில் இருந்து அவரை வெளியேற்றி பௌத்த மத வழிபாட்டுடன் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பெங்கமுவே நாலக தேரர், நாட்டுக்காக போராடிய போர் வீரரான சுரேஸ் சலேவை அரசாங்கம் இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கியுள்ளது. ஜனாதிபதியும், சானி அபேசேகரவும் பயங்கரவாதிகளை போன்று செயற்படுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய விமல் வீரவன்ச,உதய கம்மன்பில, சரத் வீரசேகர மற்றும் சஞ்ஜீவ எதிரிமான்ன ஆகியோர் 'விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கத்துக்காகவே சுரேஸ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். புலிகளின் நோக்கம் வெற்றிப் பெறுவதற்கு இடமளிக்க போவதில்லை' என்று குறிப்பிட்டனர்.
இதன்போது அவ்விடத்துக்கு வந்த சுரேஸ் சலேவின் தயார், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தனது மகன் தனக்கு உயிருடன் வேண்டும் என்று கண்ணீருடன் குறிப்பிட்டு, இலங்கை தாய்மார்கள் எவரும் இனி தமது பிள்ளைகளை இராணுவத்துக்கு வழங்க கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ' சானி அபேசேகர ஒரு மனநோயாளி அவரை மன நல மருத்துவரிடம் ஒப்படைக்க வேண்டும், ஜனாதிபதி தனது காவல் நாய்களை கட்டிப்போட வேண்டும், புலிகள் அமைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற இடமளிக்க போவதில்லை. நாட்டுக்காக போராடிய சுரேஸ் சலே விடுவிக்கப்பட வேண்டும்' என்று கோசம் எழுப்பினர்.





