அமெரிக்காவின் 10 சீ ரேஞ்சர் ஹெலி கொப்டர்கள் இலங்கை நோக்கி புறப்பட்டன
மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இவை வருகை தருவதன் மூலம், இலங்கையின் விரைவான தயார்நிலை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கும் திறன் பெருமளவில் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 சீ ரேஞ்சர் (SEA RANGER) ஹெலிகொப்டர்கள், அமெரிக்காவிலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளன. குறித்த ஹெலிகொப்டர்கள், கடந்த 15ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமா துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டன.
இவை எதிர்வரும் மே 24ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வாஷிங்டனிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
பெல் 206B-3 ஜெட் ரேஞ்சர் ஹெலிகொப்டரின் இராணுவப் பதிப்பான இந்த விமானங்கள், இலங்கை விமானப்படைக்கு ஒரு முக்கியமான வலுவூட்டலாகும். பெல் 206 மாடல்களில் இலங்கை விமானப்படை ஏற்கனவே கொண்டுள்ள நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, மேம்பட்ட விமானி பயிற்சி, பேரிடர் கால நடவடிக்கைகள் மற்றும் தேடல் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட முக்கியமான பொதுநோக்கப் பணிகளுக்கான திறன்களை இவை கணிசமாக மேம்படுத்தும்.
இந்த நன்கொடை அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், எமது பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவி முயற்சிகளையும் வலுப்படுத்துவதாக இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இவை வருகை தருவதன் மூலம், இலங்கையின் விரைவான தயார்நிலை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கும் திறன் பெருமளவில் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் புறப்படுவதற்கு முன்னதாக, குரூப் கேப்டன் இரங்க குணசிங்க, குரூப் கேப்டன் நலக்க எட்டிபொல மற்றும் ஸ்குவாட்ரன் லீடர் சாமர திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இலங்கை விமானப்படை குழுவினர் கடந்த ஜனவரி அமெரிக்காவுக்கு விஜயம் செய்தனர். ஹெலிகொப்டர்களின் ஆரம்பகட்ட நேரடிப் பரிசோதனை மற்றும் அவற்றை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அவர்கள் இவ்விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





