கணக்காய்வாளர் நாயகமாக இராணுவ அதிகாரி நியமனமா?
பொறுப்பான 41 ஆவது கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியிலிருந்து தற்போதுவரை பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படாமல், வெற்றிடம் நிலவுகின்றது.
நீண்டகாலமாக வெற்றிடமாக இருந்த கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தற்போது சேவையில் உள்ள இராணுவ அதிகாரியான கேர்ணல் ஓ.ஆர்.ராஜசிங்க நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இந்நியமனத்தை தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தை நிறைவேற்றதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அரசியல் சதியாகுமென வர்ணித்துள்ளனர்.
பொதுமக்கள் நம்பிக்கை, நிதிப்பொறுப்புடைமை மற்றும் வலுவான மேற்பார்வை என்பவற்றை உறுதிசெய்வதற்குப் பொறுப்பான 41 ஆவது கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியிலிருந்து தற்போதுவரை பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படாமல், வெற்றிடம் நிலவுகின்றது.
இந்நிலையில் அப்பதவிக்கு இலங்கை இராணுவத்தில் சேவையாற்றும் சிரேஷ்ட அதிகாரியான கேர்ணல் ஓ.ஆர்.ராஜசிங்கவை நியமிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அதற்கு புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டார்கள் மத்தியிலிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருக்கின்றது.
இதுகுறித்து தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் தேசிய தொழில்வாண்மையாளர் முன்னணி, இந்நியமனமானது அரசியலமைப்பின் ஊடாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள சுயாதீனத்துவத்தை மலினப்படுத்தும் செயற்பாடாகவே அமையும் எனக் கடும் விசனம் வெளியிட்டுள்ளது.
அத்தோடு, 'கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஒருவரை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம் தற்செயலாக நிகழ்ந்ததல்ல. மாறாக அக்கட்டமைப்பை நிறைவேற்றதிகாரத்தின்கீழ் கொண்டுவரும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதோர் அரசியல் சதியாகும்' எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோன்று கேர்ணல் ராஜசிங்கவின் இராணுவ சேவை பாராட்டத்தக்கது என்றாலும், கணக்காய்வாளர் நாயகத்துக்கு உரிய அரசியலமைப்பு மற்றும் சிவில் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அவசியமான அனுபவமோ அல்லது பொருத்தப்பாடோ அவரிடம் இல்லை எனவும் தேசிய தொழில்வாண்மையாளர் முன்னணி தெரிவித்துள்ளது.
அதேவேளை இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், 'ஜனாதிபதி அவர்களே, தற்போது சேவையில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு உங்களது அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முயற்சியானது கணக்காய்வாளர் அலுவலகத்தின் சுயாதீனத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதுடன் இராணுவமயமாக்கம் மேலும் விஸ்தீரணமடைவதற்கும் வழிகோலும்' என கரிசனை வெளியிட்டுள்ளார்.
அதேபோன்று இதுபற்றி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன், 'முதலில் முப்படைகளின் முன்னாள் அதிகாரிகள் இராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். இப்போது அவர்கள் தேசிய கணக்காய்வு அலுவலகத்துக்கு நியமிக்கப்படுகின்றனர். இதன்மூலம் ஆக்கபூர்வமான மறுசீரமைப்புக்களை அடைந்துகொள்ளமுடியாது. கட்டமைப்பு ரீதியான மாற்றமொன்றைக் கோரியே நாட்டுமக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். ஆனால் இப்போதும் முன்னைய கட்டமைப்புக்களே நடைமுறையில் இருக்கின்றன' எனத் தெரிவித்துள்ளார்.





