சர்வதேச சட்ட நிபுணத்துவ அமைப்புகளுக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் கூட்டாக கடிதம்
நாட்டில் தொடர்ச்சியாகப் பதிவாகிவரும் துப்பாக்கிச்சூடு மற்றும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி பட்டப்பகலில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அதிகரித்துவரும் வன்முறைகளாலும், சட்ட அமலாக்கத்துறை அரசியல்மயமாக்கப்பட்டிருப்பதனாலும் பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக நீதித்துறையினர் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்டு சர்வதேச சட்ட நிபுணத்துவ அமைப்புகளுக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாகக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரணில் விக்ரமசிங்க, நாமல் ராஜபக்ஷ, ஜீவன் தொண்டமான், நிமல் சிறிபால டி சில்வா, மனோகணேசன், திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, ரவி கருணாநாயக்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரேம்நாத் சி.தொலவத்த ஆகியோர் உள்ளடங்கலாக 18 பேர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
நாட்டில் தொடர்ச்சியாகப் பதிவாகிவரும் துப்பாக்கிச்சூடு மற்றும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி பட்டப்பகலில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
'இந்த சம்பவம் நீதித்துறையினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 14 ஆண்டுகளின் பின்னர் ஒரு அசாதாரண நடவடிக்கையாக அச்சங்கத்தில் அங்கம் வகிக்கும் 3500 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளுக்கு அழைப்புவிடுத்து பொதுக்கூட்டத்தைக் கூட்டியது. அதில் கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள சட்டத்தரணிகள் அனைவரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவேண்டும் என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதன் விளைவாக அன்றைய தினம் உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றங்கள் வரை நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களும் மூடப்பட்டன. அத்தோடு அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த ஆயிரக்கணக்கான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன' என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி கொல்லப்பட்டு ஒரு மணிநேரத்துக்குள்ளாகவே அவருக்கும் குற்றப்பின்னணி கொண்ட தரப்பினருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பொலிஸார் பொறுப்பட்ட முறையில் அறிக்கையொன்றை வெளியிட்டமையானது இப்படுகொலையின் தீவிரத்தன்மையைக் குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்திருப்பதாகவும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் தமது கடிதத்தில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்தோடு நீதித்துறையின் சுதந்திரம் சீர்குலைக்கப்படுதல், சட்ட அதிபர் மீது அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்படல் மற்றும் உரிய சட்ட நடைமுறைகள் மீதான அழுத்தங்கள் என்பன தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள எதிர்க்கட்சியினர், தற்போது அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது ஜனநாயக நிறுவனங்களின் அடிப்படைக் கட்டமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்குவதுடன் ஊடக சுதந்திரத்தையும் இலக்குவைக்கும் வகையில் அமைந்திருக்கிறது என விசனம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் 'சட்டமா அதிபர் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுவதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இது வழக்குத் தொடரப்படும் செயன்முறையை அரசியல்மயமாக்குவதற்கு வழிகோலியிருப்பதுடன் குற்றவியல் நீதிச்செயன்முறையின் நியாயத்துவத்தையும் பாதித்துள்ளது. நீதிமன்றங்களில் முன்வைக்கப்படவேண்டிய சட்டபூர்வ சமர்ப்பணங்களுக்குப் பதிலாக, மிகமோசமான அரசியல் ரீதியிலான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதனால் உரிய சட்ட நடைமுறைகள், இயற்கை நீதி மற்றும் சட்ட மரபுகள் என்பன மீறப்படுகின்றன' என்றும் எதிர்க்கட்சியினரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





