ராஜபக்சக்களின் பாதையில் தற்போதைய ஆட்சியாளர்கள் - மே தின உரையில் துமிந்த நாகமுவ
இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 21 இடங்களில் மே தினக் கூட்டங்களை நடத்தி தொழிலாளர்களைப் பிரித்துள்ளது.
அரசாங்கத்தின் மீது எழும் கேள்விகளை மௌனி;க்க செய்யவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 21 இடங்களில் மே தினக் கூட்டங்களை நடத்தி தொழிலாளர்களைப் பிரித்துள்ளது. ராஜபக்சக்களின் இனவாதப் பாதையையே தற்போதைய ஆட்சியாளர்களும் தெரிந்தெடுத்துள்ளனர் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முன்னிலை சோசலிசக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தினப் பேரணியும் பொதுக்கூட்டமும் 01-05-2026அன்று கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெற்றது. அங்கு தலைமையுரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 21 இடங்களில் மே தினக் கூட்டங்களை நடத்தி தொழிலாளர்களைப் பிரித்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கீழ்மட்ட அமைப்பாளர்கள் எழுப்பும் கேள்விகளை மௌனிக்கச் செய்யவே இந்தத் தந்திரோபாயம் கையாளப்படுகின்றது. மறுபுறம், எதிர்க்கட்சியினரோ சமூகத்தின் துடிப்பை உணராதவர்களாகவும், காலிமுகத் திடலில் ஒரு கூட்டத்தைக் கூட நடத்த திராணியற்றவர்களாகவும் உள்ளனர். இன்று தொழிலாளர்களின் பாதுகாப்புக் கேடயமாக விளங்கும் சேவையை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டத்தை துறைமுக நகரத்திற்குள் முடக்குவதற்கு இந்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் மிகவும் வேடிக்கையானது. முன்னைய ஆட்சியாளர்கள் இதனைச் செய்ய முற்பட்டபோது பாராடாளுமன்றத்தில் கர்ஜித்தவர்கள், இன்று அதிகாரத்திற்கு வந்ததும் நவதாராளவாதத்திற்கு பழகியவர்கள் போலச் செயற்படுகின்றனர்.
எட்டு மணிநேர வேலை நாளை ஒழிப்பதற்கும், சம்பள உயர்வு குறித்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடுவதற்கும் கமிட்டிகளை அமைத்துள்ள இந்த அரசாங்கம், ஆசிரியர் போராட்டத்தையும் திட்டமிட்டுப் படுகுழியில் தள்ளியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அடிமைத்தனமான பொருளாதாரக் கொள்கையினால் 2028 ஆம் ஆண்டில் நாடு பாரிய சரிவைச் சந்திக்கப் போவது உறுதி. அத்துடன், புதிய பாதுகாப்பு சட்டங்கள் ஊடாக மக்களின் பேச்சுச் சுதந்திரத்தைப் பறித்து, ஜனநாயகத்தை ஒடுக்கும் செயலில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, மலையக மற்றும் வடபுலத் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை தீபச்செல்வன் போன்ற சம்பவங்கள் ஊடாக அரசாங்கம் சிதைத்துள்ளதுடன், ராஜபக்சக்களின் அதே இனவாதப் பாதையையே தற்போதைய ஆட்சியாளர்களும் தெரிந்தெடுத்துள்ளனர். எனவே, ஏகாதிபத்தியவாதிகளின் பகடைக்காயாக மாறிப்போயுள்ள இந்த அரசாங்கத்தையும் பலவீனமான எதிர்க்கட்சியையும் நம்புவதில் இனி பயனில்லை. உழைக்கும் மக்களின் உண்மையான அதிகாரத்தை ஒரு மக்கள் இயக்கத்தின் ஊடாகக் கட்டியெழுப்புவதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும் என்றார்





