நீதித்துறை சுயாதீனத்தை இல்லாதொழிக்க இடமளியோம்: ரணில் - சஜித் தலைமையில் கூடி சகல எதிர்க்கட்சிகளும் தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் சமூகமளித்திருக்கவில்லை.
'ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு' எனும் தொனிப்பொருளில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் 23-07-2026 அன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரித்து நீதித்துறை சுயாதீனத்தில் அரசாங்கம் தலையிடுவதற்கு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இதன் போது அரசாங்கம் இந்த முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபடும் பட்சத்தில் அதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிடுவதற்கும், மக்களை இணைத்துக் கொண்டு போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்ற சகல எதிர்க்கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஒரே மேடையில் இவ்விடயத்துக்காக ஒன்றிணைந்தமை இலங்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் சமூகமளித்திருக்கவில்லை. அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலும் எவரும் பங்கேற்கவில்லை.
எவ்வாறிருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தளதா அத்துகோரள, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன், பிரதி தலைவர்களாக இராதாகிருஸ்னண், திகாம்பரம், இலங்கை தொழிலாளர் காங்ரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில, மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராமநாதன் அர்ச்சுணா, ரவுப் ஹக்கீம், காதர் மஸ்தான், ரவி கருணாநாயக்க, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, லசந்த அழகிவண்ண, டிரான் அலஸ், திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை முக்கிய அம்சமாகும்.
இதன் போது கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்திலும் வெளியிலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி இக்கலந்தரையாடலை ஏற்பாடு செய்ததற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு பாராட்டுத் தெரிவித்தார். அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, மகா சங்கத்தினர் மற்றும் சட்டத்தரணிகள் அமைப்புகளும் இக்கூட்டங்களில் இணைந்திருப்பதால், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பொதுவான அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என்றும், நீதித்துறை மற்றும் வழக்குகளின் தாமதத்திற்குத் தீர்வு காண்பதில் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து முறையான ஆதரவையும் யோசனைகளையும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கருத்து வெளியிடுகையில், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பலவீனப்படுத்தவோ அல்லது அதில் தலையிடவோ முயன்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும், இறுதியாக ஆட்சி மாற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. தற்போதைய சர்வாதிகார அரசாங்கம் நீதித்துறையில் கைவைக்க முயல்கிறது. ஆனால், அனைத்து முற்போக்குச் சக்திகளும் ஒன்றிணைந்து இந்த முயற்சியைத் தோற்கடித்து, நீதித்துறையில் தலையிடுவது அவர்களுக்குப் 'கையைச் சுட்டுக் கொள்ளும்' அனுபவமாக மாற்றப்படும். வௌ;வேறு அரசியல் கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும் கட்சி வேறுபாடுகள் இருந்தாலும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பது, நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிசெய்வது மற்றும் மக்களின் பரமாதிபத்தியத்தைப் பாதுகாப்பது என்ற பொதுவான நோக்கத்திற்காக அனைவரும் கை கோர்த்துச் செயற்பட வேண்டும் என்றார்.





