ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத்கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்கால தடை
ஏனைய இரு குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ள பொலிஸார் அனுமதி கோரியபோதிலும், அதற்கு அனுமதியளிக்காத நீதிவான் வழக்கை ஆகஸ்ட் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ், பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனவிரத்னவுக்கு எதிராக கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணயை முன்னெடுத்துச் செல்வதுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேற்படி மனு மீதான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் 07-08-2026 அன்று விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு வெள்ளவத்தை கடற்கரை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்துத் தொடர்பில், விபத்தைத் தடுக்காமை, அலட்சியமாக வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் ரவி செனவிரத்னவுக்கு எதிராக வெள்ளவத்துப் பொலிஸாரால் கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கு கடந்த ஜூலை 9 ஆம் திகதி கல்கிஸை நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் விசாணைக்கு வந்தபோதே, விபத்தைத் தடுக்க தவறிய குற்றச்சாட்டை ரவி செனவிரத்ன ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு 2,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இதன்போது, ஏனைய இரு குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ள பொலிஸார் அனுமதி கோரியபோதிலும், அதற்கு அனுமதியளிக்காத நீதிவான் வழக்கை ஆகஸ்ட் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.
முறைப்பாட்டாளரான வெள்ளவத்தை பொலிஸாரே குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற முற்பட்டபோது, அதற்கு அனுமதியளிக்காத நீதிவானின் உத்தரவு தவறானது எனச் சுட்டிக்காட்டி ரவி செனவிரத்ன சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, கல்கிஸை நீதிவான் நீதிமன்ற வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி வரை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், மனுவின் எதிர்மனுதாரர்களான வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் செப்டம்பர் 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்குமாறும் இதன்போது உத்தரவு பிறப்பித்திருந்தார்.





