இந்திய வெளியுறவுச் செயலாளரை தமிழ் பேசும் கட்சிகளிடையே உடன்பாடு: ரவூப் ஹக்கீம் எம்.பி
எங்களைப் பொறுத்தமட்டில், இந்தியா இலங்கைக்கு ஒரு நேச நாடு என்ற அடிப்படையில் நிறைய மானிய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்
இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளரைச் சந்திப்பதற்கு கூட்டிணைந்துள்ள ஆறு தமிழ் பேசும் கட்சிகள் மத்தியில் உடன்பாடு கண்டிருக்கிறோம். அவ்வாறே தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உட்பட அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்கான நோக்கமும் இருக்கிறது. அதுவும் விரைவில் நடக்கும் என்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், நேற்று முன்தினம் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இதன்போது இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழ் பேசும் கட்சிகளுடைய பேரவையாகச் செயல்படுவதற்கு அண்மையில் நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் வியாழக்கிழமை இரவு கலந்துரையாடல் நடைபெற்றது. திங்கட்கிழமை இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நாங்கள் கூட்டாகச் சந்திப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். அந்தச் சந்திப்பில் எங்கள் சமூகங்கள் சார்ந்த முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி ஜனாதிபதியோடு கலந்துரையாடுவது என்றும், அன்றைய தினமே பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திப்பதற்கான முயற்சியையும் செய்வதென்றும் தீர்மானித்திருக்கிறோம்.
அதேநேரம் அடுத்த சில நாட்களுக்குள் இலங்கை வரவிருக்கிற இந்தியாவின் வெளியுறவுச் செயலாளரையும் சந்திப்பதற்கு எங்களுக்கு மத்தியில் நாங்கள் உடன்பாடு கண்டிருக்கிறோம். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உட்பட அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்கான நோக்கமும் இருக்கிறது. அதையும் மிக விரைவில் சாத்தியப்படுத்தலாம் என்று எதிர்பார்த்திருக்கிறோம் என்றார். இதன்போது ஊடகவியலாளர்களால் எழுப்பபட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் வருமாறு,
கேள்வி: தமிழக மீனவர்கள் பிரச்சினை தீர்க்கப்படாத விடயமாக இருக்கையில் யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் கறுப்புக் கொடி ஏந்திப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து?
பதில்: இது நீண்டகாலப் பிரச்சினையாக இருக்கிறது. நான் அடிக்கடி இந்தியா வருகின்ற போதெல்லாம் இந்தக்கேள்வி கேட்கப்படுகிறது. இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கிற இராஜதந்திர ரீதியான பிரச்சினை மாத்திரம் அல்ல. இரு நாடுகளின் மீனவ சமூகங்களுக்கு இடையில் இருக்கின்ற வாழ்வாதாரப் பிரச்சினை.
எனவே, இதை வெறும் சட்டரீதியாக மட்டுமல்லாமல், நாங்கள் வாழ்வாதாரப் பிரச்சினை என்ற அடிப்படையில் மனிதாபிமான நோக்கில் அணுகி, ஒரு சுமுகமான உடன்பாட்டை இரு தரப்பும் காண வேண்டும்.
அதற்கான முயற்சிகளைத் தமிழ்நாட்டு மாநில அரசும், மத்திய அரசின் உதவியோடு இலங்கை அரசின் மீன்பிடித்துறை அமைச்சரோடும் பேசி, எங்களுடைய வெளியுறவு அமைச்சும் அதில் சம்பந்தப்பட்டு ஒரு நிரந்தரத் தீர்வு விரைவில் காணப்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
எங்களைப் பொறுத்தமட்டில், இந்தியா இலங்கைக்கு ஒரு நேச நாடு என்ற அடிப்படையில் நிறைய மானிய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் வாழ்கிற இந்திய வம்சாவளித் தமிழ் பேசும் மக்களுக்கு நிறைய உதவிகள், குறிப்பாக வீட்டுத் திட்டங்கள் போன்ற விவகாரங்களில் செய்கின்ற உதவிகளைப் போல, ஏனைய பிரதேசங்களிலும் இருக்கிற தமிழ் பேசும் மக்களுக்கு இன்றிருக்கிற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அரசின் அனுசரணை இருக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துவோம்.
அதேநேரம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இந்த அரசுகள் தடுக்கின்றன. அது சம்பந்தமாகவும் அவரோடு கலந்துரையாடுவது என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கிறது.
ஆனால் எதிர்பாராத விதமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கிற யுத்தச் சூழ்நிலை, கச்சா எண்ணெய்க்கு உலகச் சந்தையில் விலை ஏற்றம் இருக்கிற காரணத்தினால் எமது நாட்டின் பொருளாதாரத்திலும் அதேபோன்ற விவகாரங்கள், அதேநேரம் கப்பல் போக்குவரத்துச் சம்பந்தமான ஏற்றுமதிப் பண்டங்களின் விலை, இறக்குமதிப் பண்டங்களுக்கான விலை அதிகரிப்பு போன்ற விஷயங்கள் எங்களுடைய ஏற்றுமதிச் சந்தையையும் இறக்குமதிச் சந்தையையும் மிக மோசமாகப் பாதிக்கிற நிலைமை தோன்றியிருக்கிறது.
இது ஏற்கனவே இருக்கிற எங்களுடைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாங்கள் மீண்டு வருகின்ற ஒரு சந்தர்ப்பத்தில், இப்படிப்பட்ட எதிர்பாராத ஒரு பிரச்சினை எங்களுடைய பொருளாதாரத்திலும் பாரிய தாக்கத்தைச் செலுத்துகிறது.
கேள்வி: திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்களைக் குற்றச்சாட்டு இல்லாமல் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் தொடர் போராட்டத்தின் போது 'எங்களை இலங்கை நாட்டிற்கு அனுப்புங்கள், எங்களுடைய வழக்குகளை முடித்து வைத்துவிட்டு இலங்கைக்கு அனுப்புங்கள்' என்று சொல்லி வருகிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: இது சம்பந்தமாக நாங்கள் எங்களுக்குள் இதுவரை தீவிரமாகப் பேசவில்லை. ஆனால் இப்படியான பிரச்சினை இருக்குமாக இருந்தால், அதைப் பற்றிய மகஜர்கள் எங்களுக்கு அனுப்பப்படுமாக இருந்தால், நாங்கள் உள்ளூரில் அவ்வாறு அழுத்தங்கள் கொடுக்கலாம்.
அதேநேரம் இராஜதந்திர ரீதியாக இந்திய அரசோடு அது ஒரு சட்டரீதியான பிரச்சினையாக இருப்பதால், இன்னுமொரு நாட்டின் அரசியல் கட்சிகள் தலையீடு செய்வது அவ்வளவு சிறப்பாக இருக்காது. இருந்தாலும், இயன்றவரை இராஜதந்திர ரீதியாக எங்களுடைய வெளியுறவு அமைச்சோடும் தொடர்பு கொண்டு, அது சம்பந்தமாக எங்களால் செய்ய முடிந்ததை நாங்கள் செய்யத் துணிவோம்.
கேள்வி: தமிழர்களின் நிலங்கள் அங்கு அபகரிக்கப்பட்டவை மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. அது இப்போது எந்த நிலையில் இருக்கிறது?
பதில்: இது சம்பந்தமாகவும் ஜனாதிபதியோடு நடக்க இருக்கிற சந்திப்பில் அதை ஒரு முக்கிய விஷயமாக முன்னிறுத்தி நாங்கள் பேச இருக்கிறோம். தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற எல்லாப் பிரதேசங்களிலும் யுத்த காலத்தில் இராணுவமும் அரச படைகளும் கையகப்படுத்திய தனியார்க் காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படும் என்று அரசாங்கங்கள் மாறி மாறிச் சொல்லி வந்திருக்கின்றன. இந்நிலைமையில் அது சம்பந்தமாக இன்னும் நிலுவையில் இருக்கின்ற விஷயங்களை வலியுறுத்தி நாங்கள் பேச இருக்கிறோம் என்றார்.





